×

யூடியூபர் சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

திருச்சி: சென்னை மதுரவாயலை சேர்ந்த யூடியூபர் சங்கர் (48), காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தது தொடர்பாக பெண் போலீஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில், சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கோவை சிறையில் இருந்த சங்கரை பெண் காவலர்கள் பாதுகாப்புடன் வேனில் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஏடிஎஸ்பி கோடிலிங்கம், சங்கரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி ேகாரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. இதற்காக லால்குடி சிறையில் இருந்து பெண் காவலர்கள் புடை சூழ சங்கரை அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும், 24 மணி நேரத்தில் அவரது வக்கீல் மூன்று முறை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சங்கரை, திருச்சி மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, விடிய விடிய விசாரணை நடத்தினர்.

மேலும் ஒரு வழக்கு: நேற்று முன்தினம் திருச்சி நீதிமன்றத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டபோது, பெண் எஸ்ஐயை பார்த்து,‘‘ நீயெல்லாம் ஒரு ஆளாடி, உன் உயரதிகாரியை பற்றியே நான் மீடியாவில் போட்டு கிழிப்பேன், உன்னை என்ன பண்ண போறேன்னு பாரு, உன்னையும் மீடியாவில் போட்டு கிழிப்பேன், உன் வேலையை காலி பண்ணுவேன். சட்டையை கழற்றாமல் விடமாட்டேன்’’என்று கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து பெண் எஸ்ஐ கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில், போலீசார் யூடியூபர் சங்கர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா வழக்கில் காவல் கோரி போலீஸ் மனு
கஞ்சா வழக்கில் கைதான சங்கரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மதுரை நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதை நேற்று விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், வரும் 20ம் தேதி சங்கரை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் கஞ்சா வழக்கில் கைதான சங்கருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மற்றொரு வழக்கறிஞர் தரப்பிலும் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. ஒரு வழக்கில் ஒரு நபருக்கு இரு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், எந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post யூடியூபர் சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Shankar ,YouTuber ,Chennai Madurai, Chennai ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...