×

தனியார் பஸ்சில் ₹10 லட்சம் சிக்கியது சென்னை வாலிபரிடம் ஐடி விசாரணை

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று வழக்கம் போல் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். வாலிபர் ஒருவரின் பையை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக ரூ.10 லட்சம் பணம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

இதனால் அந்த வாலிபரை, பணப்பையுடன் கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த கோபால் மகன் ராஜா (27) என்பது தெரியவந்தது. அவர், தனக்கு வேண்டப்பட்ட அப்துல் ரசாக் என்பவர் மஞ்சக்குப்பத்தில் வீடு கட்டி வருவதாகவும், அவருக்கு கொடுப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் கூறினார். ஆவணங்கள் இல்லாததால் போலீசார் ரூ.10 லட்சத்தை கைப்பற்றி வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர். வருமானவரித் துறையினர் இதுகுறித்து ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் பஸ்சில் ₹10 லட்சம் சிக்கியது சென்னை வாலிபரிடம் ஐடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cuddalore ,Manjakuppam Albatai ,Puducherry ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு