×

தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது சக மனிதனை பாகுபாடுடன் பார்ப்பது ஏற்புடையது அல்ல: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. சக மனிதனை பாகுபாடுடன் பார்ப்பது ஏற்புடையது அல்ல என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியில் பகவதியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளது. இந்த கோயில்களில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு மே 19ம்தேதி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பட்டியல் பிரிவினரை சேர்க்காமல் தீண்டாமை வன்கொடுமை செய்கின்றனர். இந்த திருவிழாவில் அனைத்து இன சமூகத்தினரும் பங்கேற்று வழிபாடு செய்ய அனுமதிக்குமாறு உத்தரவிடவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வேடசந்தூர் தாசில்தார் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் சுமூகமாக முடிந்தது. இதில், அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘தற்போதும் சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை ஐகோர்ட் வேடிக்கை பார்க்காது. ஒரு மனிதன், சக மனிதனை பாகுபாடுடன் பார்ப்பது ஏற்புடையது அல்ல. திருவிழாவின்போது எந்தவிதமான சட்டம், ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் வருவாய்த்துறையினர், போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும். பாகுபாடின்றி அனைவரும் வழிபாடு செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது சக மனிதனை பாகுபாடுடன் பார்ப்பது ஏற்புடையது அல்ல: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,iCourt branch ,Saminathan Icourt ,Dindigul District ,Vedasandoor ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர்...