×

சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்: மூன்று பெண் உள்பட 5 பேர் கைது

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் ₹22 கோடி மதிப்புடைய போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்த நைஜீரியா, பிரேசில் நாடுகளைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட என 5 பேரை மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சென்னைக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவான நார்கோட்டிக் கண்ட்ரோல் பீரோவுக்கு (என்சிபி) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து என்சிபி தனிப்படையினர், சாதாரண உடைகளில் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த தனியார் பயணிகள் விமானத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 பேரை என்சிபி அதிகாரிகள் பிடித்து சோதனை நடத்தினர். அவர்கள் அணிந்திருந்த ஆடைக்குள் 1.8 கிலோ கொக்கைன் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து, சென்னை அண்ணாநகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல் நெதர்லாந்து நாட்டிலிருந்து சரக்கு விமானம் மூலம் வந்த பார்சல் ஒன்றை, என்சிபி அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றி சோதனை நடத்தினர். அந்த பார்சலில் 1.4 கிலோ போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு பார்சலில் இருந்த முகவரியின்படி, புதுச்சேரி மற்றும் பெங்களூருவில் பெண் உள்பட இருவரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரையும் இந்த போதை கடத்தல் விவகாரத்தில் கைது செய்தனர். பிரேசில் நாட்டவரிடம் இருந்து 15 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மொத்தம் ₹22 கோடி மதிப்புடைய கொக்கைன் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பிரேசில் மற்றும் நைஜீரியா நாடுகளைச் சேர்ந்த 4 பேர், இந்தியர் ஒருவர் என 5 பேரை மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்: மூன்று பெண் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Central Narcotics Control Unit ,Nigeria ,Brazil ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜாபர்...