×

சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து 2 பஸ்கள் மோதி மருத்துவர் உள்பட 4 பேர் பலி: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சென்னை: சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து ஆம்னி பேருந்து, அரசு பேருந்து மோதிய விபத்தில் மருத்துவர் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை கூட்ரோடு பகுதியில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென்று பழுதாகி சாலையின் நடுவே நின்றது. அப்போது, திருச்சியில் இருந்து சென்னைக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக டிப்பர் லாரியின் வலதுபுறத்தில் மோதியது.

அதேநேரம், பின்னால் வந்த அரசு பேருந்து ஆம்னி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், ஆம்னி பேருந்தில் இருந்த 4 பயணிகள் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த படாளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, படுகாயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வாகன இடிபாடுகளில் சிக்கி இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மதுராந்தகம் அடுத்த அகிலி கிராமத்தை சேர்ந்த மருத்துவர் ராஜேஷ், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஈஸ்ட் அவன்யூ சாலையை சேர்ந்த தனலட்சுமி (51), பரங்கிமலை பட்ரோடு பகுதியை சேர்ந்த பிரவீன் (24), திருச்சி எடமல்லிபட்டி புதூர் ஜாய் எஸ்தர் (30) ஆகியோர் விபத்தில் இறந்தது தெரியவந்தது. இந்த கோர விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, போலீசார் மீட்பு வாகனம் மூலம், விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: மதுராந்தகம் வட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர் கிராமத்தின் எல்லைக்குட்பட்ட புக்கத்துறை கூட்டுசாலை அருகில் நேற்று அதிகாலை பெண் உள்பட நான்கு பேர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

 சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று மாலை நடந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து 2 பஸ்கள் மோதி மருத்துவர் உள்பட 4 பேர் பலி: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Trichy National ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி அருகே அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான 3 கார்கள்