×

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் டெல்லி செல்ல தடை இல்லை: நாளிதழில் வெளிவந்த செய்திக்கு அரசு மறுப்பு

சென்னை: காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என்று நேற்று வெளியான செய்தியை தமிழக அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர். டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்கப் புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் புதுச்சேரியில் 21.3.2024 அன்று நடந்தது. அதில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை\” என்ற செய்தி நேற்று (16ம் தேதி) ஒரு நாளிதழில் வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மாநில நதிநீர் பிரச்னை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், அந்த கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது அந்த நாளிதழுக்கு உகந்ததல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் டெல்லி செல்ல தடை இல்லை: நாளிதழில் வெளிவந்த செய்திக்கு அரசு மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chennai ,Tamil Nadu government ,Kaviri ,Kaviri Water Management Committee ,Government of Tamil Nadu ,Kaviri Group ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...