×

மனைவியை அபகரித்து கொண்டு தீர்த்து கட்ட முயன்றதால் கணவன் ஆத்திரம்; வீட்டின் கதவை உடைத்து கள்ளக்காதலி, குழந்தைகள் கண் முன்பு ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை

சென்னை: சைதாப்பேட்டையில் மனைவியை அபகரித்து கொண்டு தீர்த்து கட்ட முயன்றதால் முன்னாள் கணவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டின் கதவை உடைத்து கள்ளக்காதலி, குழந்தைகள் கண் முன்பு ரவுடியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தான்.

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை கார்ப்பரேஷன் காலனியை சேர்ந்தவர் கவுதம்(25). ‘சி’ கேட்டகிரி ரவுடியான கவுதம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கவுதமனும் தேனாம்பேட்டை தாமஸ் சாலையை சேர்ந்த ராஜ்கிரன்(26) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். கண்ணகிநகரை சேர்ந்த பிரியா என்பவரை கவுதம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். ஆனால் பிரியாவின் பெற்றோர் கவுதமுக்கு பெண் கொடுக்காமல் கவுதம் நண்பரான ராஜ்கிரனுக்கு திருமணம் ெசய்து கொடுத்தனர். இருந்தாலும் கவுதம் எங்கு வேலைக்கு சென்றாலும் ராஜ்கிரனை ஒன்றாக அழைத்துச் சென்று வந்துள்ளார்.

அந்த வகையில் ராஜ்கிரன் மனைவியான பிரியா(23) உடன் கவுதம் மீண்டும் நன்றாக பழங்கி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து ராஜ்கிரனுக்கு தெரியவந்தது. பல முறை தனது மனைவி பிரியாவை கண்டித்தும் அவர் கேட்காமல் கவுதமுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கண்ணகி நகரில் வசித்து வரும் பிரியாவின் பெரியம்மா வளர்மதியிடம் ராஜ்கிரன் கூறி கண்டிக்க சொல்லியுள்ளார். அதன்படி வளர்மதி தனது இளைய மகன் சுகுமார்(எ)காதா என்பவர் கவுதமை தனது சகோதரியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி மிரட்டியுள்ளார். இதனால் நெருங்கிய நண்பர்களாக இருந்த ராஜ்கிரனுக்கும், ரவுடி கவுதமுக்கும் இடையே பகை உருவானது.இதற்கிடையே பிரியா மற்றும் கவுதம் ஆகியோர் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூராக உள்ள கணவர் ராஜ்கிரனை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரட்டூர் காவல் நிலைய எல்லையில் ராஜ்கிரனை ரவுடி கவுதம் மற்றும் மனைவி பிரியா ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். ஆனால் அதில் இருந்து ராஜ்கிரன் தப்பிவிட்டார்.

பிறகு கொரட்டூர் போலீசார் ரவுடி கவுதம் மற்றும் கள்ளக்காதலி பிரியா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி கவுதம் மற்றும் கள்ளக்காதலி பிரியா மற்றும் பிரியாவின் இரண்டு குழந்தைகளுடன் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டை விட்டுவிட்டு சைதாப்பேட்டை ராம்பேட் தெருவில் உள்ள குடியிருப்பில் முதல் மாடியில் கடந்த மே 23ம் தேதி முதல் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.இதற்கிடையே ரவுடி கவுதம் தனது கள்ளக்காதலி பிரியாவின் சகோதரன் சுகுமார்(எ)காதா என்பவரிடம் ‘என்னிடம் ஏன் பேசாமல் இருக்கிறாய்’ என்று கூறி தகராறு செய்துவந்துள்ளார். அதற்கு தனது சகோதரியுடனான கள்ளக்காதலை கைவிட்டால் தான் பேசுவேன் என்று கூறியுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதேநேரம், சிறையில் இருந்து வெளியே வந்த கவுதம் மற்றும் கள்ளக்காதலி பிரியா ஆகியோர் மீண்டும் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று ராஜ்கிரன், பிரியாவின் சகோதரன் சுகுமார்(எ)காதாவிடம் கூறி புலம்பியுள்ளார். இதையடுத்து ராஜ்கிரன் ரவுடி கவுதம் தன்னை மீண்டும் கொலை செய்வதற்குள் அவனை கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்து, தனது நண்பர்களான பிரியாவின் சகோதரன் சுகுமார்(எ)காதா, தேனாம்ேபட்டை தாமஸ் சாலையை சேர்ந்த ரவுடி மணி(எ) டியோ மணி(26), தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் தெவை சேர்ந்த (பி) கேட்டகிரி ரவுடியான பிரதீப்(எ)குள்ளு(25), துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்த ரவுடி சுரேஷ்(எ)காளி(27), தேனாம்பேட்டை எஸ்எம் நகரை சேர்ந்த ராஜ்பாய்(28) ஆகிய 6 பேருடன் இணைந்து ரவுடி கவுதமை கொலை ெசய்ய முடிவு செய்து ஆட்டோ மற்றும் பைக்கில் நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டையில் உள்ள ராம்பேட்டை தெருவுக்கு சென்றுள்ளனர்.

அங்கு கவுதம் வீட்டின் கதவை ராஜ்பாய் தட்டியுள்ளார். அப்போது வீட்டிற்குள் தனது கள்ளக்காதலி பிரியா, குழைந்தைகளுடன் படுத்து கொண்டிருந்த ரவுடி கவுதம் யார் என்று கேட்டு, கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக பேசியுள்ளார். அதற்கு கவுதம் வெளியே வரமுடியாது என்று கூறியுள்ளார். உடனே ராஜ்பாய், பிரியா உன் கணவனை ெவளியே அனுப்பு பேசனும் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கவுதம் ஏதோ பிரச்னை வருகிறது என்று கதவை திறக்கவில்லை.

ஒரு கட்டத்தில் கவுதம் வீட்டின் கதவை ராஜ்கிரன், ராஜ்பாய், டியோ மணி, பிரதீப், சுகுமார் ஆகியோர் உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து, கவுதமை கள்ளக்காதலி பிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள் கண் முன்பு கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர்.இதை பார்த்த பிரியா தனது குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்து உதவி கேட்டு அலறினார். ஆனால் முன்னாள் கணவன் ராஜ்கிரன் தனது நண்பர்களுடன் கவுதமை கொன்று விட்டு, ஆட்ேடா மற்றும் பைக்கில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பிரியா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி விரைந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் மற்றும் சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ரவுடி கவுதம் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம் கள்ளக்காதலி பிரியாவிடம் விசாரித்தனர். அவர், முதலில் எங்கள் வீட்டிற்கு சரவணன் வந்தார். 4 ஆண்டுகளுக்கு முன் கவுதம் அவரது நண்பருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கவுதம் பெட்ரோல் குண்டு வீசினார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ததாக முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் பிரியாவிடம் முறையாக விசாரித்தபோது, தனது கணவர் ராஜ்கிரன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து சைதாப்பேட்டை போலீசார் கொலை குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவுடிகளான பிரதீப்(எ)குள்ளு(25), சுரேஷ்(எ)காளி(27), ராஜ்பாய்(28) ஆகிய மூன்று பேர் சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜ்கிரன், சுகுமார், டியா மணி ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post மனைவியை அபகரித்து கொண்டு தீர்த்து கட்ட முயன்றதால் கணவன் ஆத்திரம்; வீட்டின் கதவை உடைத்து கள்ளக்காதலி, குழந்தைகள் கண் முன்பு ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Thenampet Thiruvalluvar Road Corporation ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...