×

உணவுக்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம்: ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

சென்னை: உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், மழை என எந்த பருவநிலையாக இருந்தாலும் இந்திய மக்களில் பெரும்பாலானோர் டீ, காபி குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கடும் வெயில் காலத்திலும் கூட இந்தியாவில் டீக்கடைகளை கூட்டம் நிற்பதை பார்க்கமுடியும். அதிகமாக டீ மற்றும் காபியை குடிப்பதால் உடலில் தேவையற்ற உபாதைகள் ஏற்படும் என பல ஆய்வுகள் தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஆனாலும், இந்தியர்களின் உணவு முறையில் டீ மற்றும் காபி முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது. காலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை டீ கடைகள் திறந்து இருக்கிறது. இந்நிலையில் உணவுக்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) உடன் இணைந்து, நாடு முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக இந்திய குடிமக்களுக்கு 17 புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி, உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்பு சத்துகள் இந்த டீ, காபி பானங்களால் தடைபடக்கூடும் எனவும் இதனால் அனீமியா போன்ற உடல்நலக்குறைபாடு ஏற்படலாம் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் அதிக காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 150 மில்லி காய்ச்சிய காபியில் 80 முதல் 120 மில்லிகிராம் காஃபின் உள்ளது, அதே நேரத்தில் இன்ஸ்டன்ட் காபியில் 50 முதல் 65 மில்லிகிராம் காஃபின் வரை உள்ளது. ஒரு டீயில் 30 முதல் 65 மில்லிகிராம் காஃபின் உள்ளது. மேலும் மக்கள் பால் இல்லாமல் தேநீர் அருந்துமாறு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. பால் இல்லாமல் தேநீர் அருந்துவது மூலம் ரத்த ஓட்டம் சீராகிறது எனவும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் தேநீர் மற்றும் காபி குடிப்பதை கட்டுப்படுத்தி, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம் என்றும் அதே நேரத்தில் எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை குறைவான அளவே எடுத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உணவுக்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம்: ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : ICMR ,Chennai ,Indian Society of Medical Research ,Indians ,
× RELATED அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு...