×

குடும்ப அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் ₹418.55 கோடியில் கொள்முதல்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:
நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய தேவையான 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்குரிய இ-ஒப்பந்தப்புள்ளி இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின்படி ஏப்ரல் 20ம் தேதி கோரப்பட்டு, கடந்த மே 2ம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 4ம் தேதி விலைப்புள்ளி திறக்கப்பட்டது.

குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களுடன் விலைக்குறைப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நியாயமான விலை கிடைக்கப் பெற்றதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குழுமத்தின் ஒப்புதலின்படி, ₹418.55 கோடிக்கு துவரம் பருப்பு விநியோகிப்பாளர்கள் 4 பேருக்கும், பாமாயில் விநியோகிப்பாளர்கள் 3 பேருக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டது.

நடப்பு மே மாதத்திற்கு விநியோகிப்பதற்காக நியாயவிலைக் கடைகளுக்கு 5,405 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 31,19,722 பாமாயில் பாக்கெட்டுகள் நகர்வு செய்யப்பட்டுள்ளன. ஆகவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குடும்ப அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் ₹418.55 கோடியில் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Government ,Canada ,Dinakaran ,
× RELATED ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை...