×

பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி; தலைமை ஆசிரியர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா: சென்னையில் நடக்கிறது

சென்னை: பத்து மற்றும் பிளஸ் 2 ெபாதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கான சீர்மிகு பாராட்டு விழா பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் நடப்புக் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகள் குறிப்பிடத்தக்க தேர்ச்சி பெற்று சாதித்துள்ளன. குறிப்பாக பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவியர் 94.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். அதிலும் 397 அரசு மேனிலைப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளன. மேலும் தமிழ்ப் பாடத்தில் 35 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் 87.90 சதவீதம். 1364 அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. தமிழ்ப்பாடத்தில் மட்டும் 100 சதவீத மதிப்பெண்ணை 8 பேர் பெற்றுள்ளனர். இரண்டு தேர்வுகளிலும் 1761 பள்ளிகள் இந்த ஆண்டில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

இது ஒரு வரலாற்று சாதனையாக பள்ளிக்கல்வித்துறை கருதுகிறது. அதனால் அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டும் வகையில் சென்னையில் சீர்மிகு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்ப்பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை சேர்ந்த 43 மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட உள்ளனர்.

இந்த பாராட்டுவிழாவின் போது ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்ச தேர்ச்சி வீதம் பெற்ற 5 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும், 100 சதவீத தேர்ச்சியை எட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடி கருத்துகளை பரிமாற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் 100 சதவீதம் இலக்கை எட்டும் வழிவகையை பள்ளிக் கல்வித்துறை செய்ய இருக்கிறது.

The post பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி; தலைமை ஆசிரியர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா: சென்னையில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Appreciation ,Chennai ,School Education Department ,
× RELATED பள்ளிகள் திறக்கும் போது பின்பற்றப்பட...