×

மாத தவணை கட்ட தாமதமானதால் தொழிலதிபரை கொடூரமாக தாக்கிய பைனான்ஸ் நிறுவன ஊழியர் கைது

தாம்பரம்: தாம்பரம் அருகே மாத தவணை கட்ட தாமதமானதால், தொழிலதிபரை கொடூரமாக தாக்கிய பைனான்ஸ் நிறுவன ஊழியரை, போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (43). இவர், காயத்ரி எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் பொக்லைன் இயந்திரங்கள் வைத்து நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், தமிழ்நாடு கட்டுமான இயந்திரங்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் மேற்கு தாம்பரம், துரைசாமி தெருவில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் 23 மாத தவணை முறையில் கடந்த 2022ம் ஆண்டு கடன் பெற்று கார் ஒன்று வாங்கியுள்ளார். 23 மாத தவணைகளில், 18 மாதங்கள் வரை முறையாக தவணை தொகையை செலுத்திய நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி கட்டவேண்டிய தவணை தொகை செலுத்த 12 நாட்கள் கால தாமதம் ஆகியுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கடந்த 13ம் தேதி, ஆனந்தன் வீட்டிற்கு சென்று கார் மாத தவணையை செலுத்தவில்லை. எனவே, அதனை உடனடியாக செலுத்தும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஆனந்தனை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், ஆனந்தனின் காது ஜவ்வு கிழிந்தது. இதுகுறித்து ஆனந்தன், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பின்னர், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு கட்டுமான இயந்திரங்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் மேற்கு தாம்பரம், துரைசாமி ரெட்டி தெருவில் உள்ள பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து சேலையூர் காவல் நிலைய போலீசார், ஆனந்தனை தாக்கிய அகரம்தென் பகுதியை சேர்ந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் மனோஜ் குமார் (24) என்பவரை ஆபாசமாக பேசுதல், கையால் அடித்தல், கையில் இருந்த சாவியை கொண்டு முகத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

The post மாத தவணை கட்ட தாமதமானதால் தொழிலதிபரை கொடூரமாக தாக்கிய பைனான்ஸ் நிறுவன ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Anandan ,Selaiyur ,Gayatri Earth Movers ,Arrested Finance Company ,Dinakaran ,
× RELATED தாம்பரம் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு: இரவில் விடியவிடிய மக்கள் அவதி