×

ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை அபகரித்த டிரைவர் சிக்கினார்: குடும்ப வறுமையால் திருப்பி தரவில்லை என வாக்குமூலம்

துரைப்பாக்கம்: ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை அபகரித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். மண்ணடி பகுதியை சேர்ந்தவர் மார்க்கிரேட் மாலா (64). இவரும், இவரது உறவினரும் கடந்த 5ம் தேதி சோழிங்கநல்லூர், கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள மகள் வீட்டிற்கு வந்துள்ளனர். முன்னதாக, பாரிமுனையில் இருந்து அரசுப் பேருந்தில் வந்த இருவரும், சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் பயணித்துள்ளார். மகள் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், மார்க்கிரேட் மாலா 12 சவரன் நகை வைத்திருந்த பையை, ஆட்டோவில் மறந்து விட்டு வந்தது தெரிந்தது.

ஆட்டோவை செயலி மூலம் அழைக்காமல், சாலையில் வந்த ஆட்டோவில் நேரடியாக ஏறிச் சென்றதால் ஆட்டோவின் பதிவு எண் மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் விவரம் தெரியாததால் மாலா சோகத்தில் மூழ்கினார். பின்னர் இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜு, தலைமை காவலர் யாசர் அரபாத், முதல்நிலை காவலர் நித்தியானந்தம், இரண்டாம் நிலை காவலர் ரவி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார், ஆட்டோ குறித்த விவரங்களை சேகரிக்க சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவின் பதிவு எண்ணை கண்டுபிடித்து அதன் அடிப்படையில், கண்ணகி நகர், எழில் நகரை சேர்ந்த பாண்டியன் (67) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில், ஆட்டோவில் பயணி தவறவிட்ட பையை திறந்து பார்த்தபோது, அதில் நகைகள் இருந்தது. அதை நேர்மையாக திருப்பி கொடுக்கலாம் என்று பார்த்தேன். ஆனால் என்னுடைய வறுமை, கடன் தொல்லை காரணமாக அதை திருப்பித் தராமல் நானே எடுத்துக் கொண்டேன். வயதான மனைவியின் மருத்துவ செலவு, 2 மாத வீட்டு வாடகை பாக்கி, 3 மாத ஆட்டோ தவணை ஆகியவற்றுக்காக அந்த நகையை அடகு கடையில் வைத்துவிட்டேன், என கூறியுள்ளார். இதனையடுத்து பாண்டியன் அடகு கடையில் இருந்து 12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.எந்த ஒரு விவரமும் இல்லாமல் பெண் தவறவிட்ட 12 சவரன் தங்க நகையை 10 நாட்கள் போராடி மீட்டுக் கொடுத்த தனிப்படை போலீசாரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

The post ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை அபகரித்த டிரைவர் சிக்கினார்: குடும்ப வறுமையால் திருப்பி தரவில்லை என வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam ,Margaret Mala ,Manadi ,Chozhinganallur, Gangayamman Koil Street ,Dinakaran ,
× RELATED திடீரென டயர் வெடித்ததால் கல்லூரி...