×

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் பட்டியலின மக்கள் தொழில் முனைவோராக்கும் திட்டம்: அரசுக்கு நன்றி தெரிவித்த பயனாளி

திருவள்ளூர்: பட்டியலின மக்கள் தொழில் முனைவோராகிட, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் பயடைந்த பயனாளி, அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில் முனைவோர்களாக உருவாக்கவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது.

கடந்தாண்டு, மிக குறுகிய காலகட்டத்திலேயே இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இணைய வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக யுத்திகள், வரவு செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின் கீழ் பத்து நாட்கள் தொழில் முனைவு பயிற்சி தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் வழங்கப்பட்டு 1,303 தொழில் முனைவோர்களுக்கு ரூ.159.76 கோடி அரசின் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 288 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.33.09 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளுர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இத்திட்டத்தின் வாயிலாக 73 நபர்களுக்கு ரூ.1112.50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கன்னடபாளையம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் சுதா. இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு சுயமாக சுய தொழில் செய்ய விரும்பினார். இவர் சுற்றுச் சூழலுக்கு கெடுதல் இல்லாத ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய வாழைத்தட்டு, பாக்குத்தட்டு செய்யும் தொழில் நடத்திட வேண்டுமென முயற்சித்து வந்தார். ஆனால் இத்தொழில் நடத்திட போதிய நிதி ஆதாரம் இவரிடம் இல்லை.

இந்நிலையில் இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்று பாக்குத்தட்டு, தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு சிறப்பாக தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இது குறித்து சுதா கூறும்போது, பட்டியலின மக்கள் தொழில் முனைவோராகிட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று இந்நிறுவனத்தினை சிறப்பான முறையில் நடத்தி வருகிறேன். இத்திட்டத்தினை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பட்டதாரி இளைஞர்களை சிறந்த தொழில் முனைவோராக உருவாக்கி ஊக்குவித்து வாய்ப்பளித்து வரும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என கூறினார்.

The post அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் பட்டியலின மக்கள் தொழில் முனைவோராக்கும் திட்டம்: அரசுக்கு நன்றி தெரிவித்த பயனாளி appeared first on Dinakaran.

Tags : Annal Ambedkar ,Thiruvallur ,
× RELATED நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின்...