×

கோடை காலத்தில் அதிகமாக பருகும் செயற்கை குளிர்பானங்களால் ஏற்படும் தீமைகள்: மருத்துவர்கள் தரும் அட்வைஸ்

* இயற்கை பானங்களை பருகுவது நல்லது
* சர்க்கரை நோய், இதய நோய் வர வாய்ப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. குறிப்பாக ஈரோடு, கரூர், வேலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக மிக அதிகமாக இருந்தது. வெயிலின் தாக்கம், வெப்ப அலை அதிகரித்த வண்ணம் உள்ளதால், பொதுமக்கள் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என அரசும் மருத்துவர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.

கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடைத் தெருக்களில் செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் பார்லர்கள் புதிது புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் விற்கும் வண்ண வண்ண செயற்கை குளிர் பானங்களை குடிக்கும் போது உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். ஆனால், அவற்றில் நன்மைகளை விட தீமைகளே அதிகம். குறிப்பாக வெயிலில் இருந்து வீட்டிற்கு வந்த உடன் குளிர்ந்த நீர் குடிப்பதால் உடலின் வெப்பத்தின் அளவை அதிகரிக்கச் செய்து, உடல் நல உபாதைகளை ஏற்படுத்தும்.

குளிர்ச்சியான உணவுகளில் இருக்கும் குளிர்ந்த தன்மை ரத்தக் குழாய்களில் சுருக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தொண்டை புண் ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்று குடிக்கும் செயற்கை குளிர்பானங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. எனவே உடலில் உணவு உண்பதால் சேரும் சர்க்கரையின் அளவை விட செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் சேரும் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. இது உடலுக்கு பல்வேறு அபாயத்தை ஏற்படுத்துகிறது. செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் கொழுப்பு கல்லீரலில் சேருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க குடிக்கும் செயற்கை குளிர்பானங்களில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இதை அதிகமாக குடிப்பதால் அந்த சர்க்கரை கல்லீரல் மீது படிந்து அது கொழுப்பு கல்லீரலாக மாறுகிறது. இது வயிற்று வீக்கம், தோல் அரிப்பு, மஞ்சள் சிறுநீர் மற்றும் கண்கள் உள்ளிட்ட உடல் உபாயத்தை ஏற்படுத்தும். 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் குடித்தவர்களுக்கு மட்டுமே இந்த கொழுப்பு கல்லீரல் இருக்கும் ஆனால், தற்போது 4ல் 3 நபர்களுக்கு இந்த குளிர்பானம் குடிப்பதால் ஏற்படுகிறது. வெயில் காலத்தில் அதிக குளிர்ச்சியுடன் உள்ள பொருள்களையோ, செயற்கை குளிர்பானங்களையோ குடித்தால் அதிகமாக தொண்டை வலி, சளி, இருமல் ஆகிய பிரச்னைகள் உண்டாகும்.

இதனால் மிதமான வெப்பத்தில் தண்ணீரை குடிக்க வேண்டும். செயற்கை குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது. தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் உடலுக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளிட்ட பிரச்னை ஏற்படும். மேலும் செயற்கை குளிர் பானங்களில் உள்ளடங்கி இருக்கும் அதிக அளவிலான சர்க்கரை உடலை சேதப்படுத்தும். உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, குளிர்பானங்களில் காஃபின் , செயற்கை வண்ணங்கள் இருப்பதால் புற்றுநோய் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் இளநீர், அரசு அளிக்கும் ஓஆர்எஸ் கரைசல், தண்ணீர் உள்ளிட்டவை குடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

* இதயத்திற்கு ஆபத்து
மிக அதிக குளிர்ச்சியுடைய குளிர் பானங்களை வெயில் நேரத்தில் குடிக்கும் போது நம்முடைய உடலின் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும். அது ரத்தத்தையும் சூடாக்கும். இதனால் உடலின் ரத்த அழுத்த நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழும். இதனால் இதயத் துடிப்பின் வேகம் இயல்பை விட மிக மிகக் குறைந்து விடும். எனவே வெயில் காலத்தில் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீரை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

* குழந்தைகளுக்கான பிரச்னைகள்
அதிக அளவில் மார்க்கெட்டிங் செய்யப்படும் குளிர்பானங்கள் குழந்தைகளை எளிதில் கவர்கிறது. மிக குளிர்ச்சியாக குளிர்பானங்களை குடிக்கும் போது கோடை காலத்தில் சளி, காய்ச்சல் வருவதற்கு அதிக வாய்புள்ளது. எனவே குழந்தைகளுக்கு குளிர்பானங்களை வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காய்கறி, பழங்களை உண்ணப் பழக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்படுத்தும்
பிரச்னைகள்
நீரிழிவு நோய்
செரிமான பிரச்னை
தலைபாரம்
பக்கவாத பிரச்னை
மனச்சிக்கல்
தொண்டை வறட்சி
உடல் பருமன்

* கோடை காலத்தில் உடலுக்கு எது நல்லது?
இளநீரில் பொட்டாசியம், கால்சியம், சோடியம் ஆகியவை அதிகமாக இருப்பதால் உடல் வெப்பநிலையைத் தணிக்கும். மேலும், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு இருக்கும்.

The post கோடை காலத்தில் அதிகமாக பருகும் செயற்கை குளிர்பானங்களால் ஏற்படும் தீமைகள்: மருத்துவர்கள் தரும் அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...