×

குஜராத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: 3வது அணியாக தகுதி பெற்றது

ஐதராபாத்: ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம், 15 புள்ளிகளுடன் 3வது முறையாக சன்ரைசர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஐதராபாத் ராஜிவ்காந்தி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இரவு 10 மணி வரையிலும் மழை விடாமல் பெய்து கொண்டிருந்ததால், மைதானத்தை போட்டி நடுவர்கள் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, 10.10 மணி அளவில் ஒருபந்து கூட வீசப்படாத நிலையில், போட்டி ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம், சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் 3வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிய குஜராத் டைட்டன்ஸ் 14 போட்டிகள் முடிவில் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி அடுத்ததாக வரும் 19ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளது. பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக முன்னேறப் போவது யார் என்கிற போட்டியில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

The post குஜராத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: 3வது அணியாக தகுதி பெற்றது appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Sunrisers ,Hyderabad ,IPL T20 ,Sunrisers Hyderabad ,Gujarat Titans ,Rajiv Gandhi Stadium ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுக்கு பின் பிளே ஆப் சுற்றில் கால்பதித்து சன்ரைசர்ஸ் சாதனை