×

மயிலாடி சிற்பங்களுக்கு கற்கள் கிடைக்குமா? தொழிலாளர்கள் கவலை

அஞ்சுகிராமம்: தமிழர்களின் கலைத்திறனில் முக்கிய பங்கு வகிப்பது சிற்பக்கலைதான். பாறைகளில் வெட்டி எடுக்கும் பெரிய கற்களை உடைத்து அதனை கடவுள் உருவங்களாகவும், தலைவர்களின் உயிரோட்டமான சிற்பங்களாகவும், நாம் வாழ்வில் அன்றாடம் பயன்படும் அம்மி-குளவி, இடிகல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களாகவும் உருமாற்றும் வல்லமை, சிற்பக்கலைஞனின் உளிக்கு உண்டு. அந்த வகையில் மயிலாடி கிராமம் சிற்ப தொழிலுக்கு பெயர் பெற்று திகழ்கிறது. இந்த பகுதியில் இரவு பகலாக சிற்ப பணி நடக்கிறது. திரும்பிய திசையெல்லாம் உளியின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். எந்த திசையில் பார்த்தாலும் விநாயகர், சிவன், முருகன் என்று கடவுள்கள் மற்றும் தலைவர்களின் சிலைகள் செதுக்கி வைத்து இருப்பதை பார்க்க முடிகிறது. மயிலாடியில் தயாரிக்கப்படும் கல் சிற்பங்கள் தமிழகத்தை விட கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குத்தான் அதிக அளவில் செல்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

லண்டன் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை, அமெரிக்காவில் உள்ள நடராஜர் சிலை ஆகியவை மயிலாடி மண்ணில் இருந்து சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலைகள் செதுக்குவதற்காக, தெங்கம் பொத்தையை பல ஆண்டு காலமாக சிற்பிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல் எடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்ப தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். இதுகுறித்து மயிலாடி சிவம் கல் சிற்பகூடம் உரிமையாளர் டாக்டர் சிவம் முருகேசன் கூறியதாவது: மயிலாடியில் தயாரிக்கப்படும் கல்சிற்பங்கள் உலக பிரபலமானவை. இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் சிற்பங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சமீபத்தில் தான் மயிலாடி கல் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலாடி கல் சிற்பத் தொழில் மூடுவிழா காணும் நிலையில் உள்ளது. குமரியில் பாறைகளை வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டதால், சேலம், தேனி, நாமக்கல், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கற்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செலவுகள் பலமடங்கு அதிகரிக்கிறது. தற்போது அங்கும் கற்கள் தட்டுப்பாடு நிலவி வருவகிறது. இதனால் சரியான நேரத்திற்கு கற்கள் கிடைப்பதில்லை. மேலும் இங்கிருந்து பெறப்படும் கற்களும் சிற்ப தொழிலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. இந்த கற்களில் ஏராளமான கழிவுகள் ஏற்படுகிறது. மயிலாடியில் கல் சிற்பம் தயாரிக்க கற்கள் போதுமான அளவு கிடைக்காததால் சிற்பத் தொழில் பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்த சுமார் 1000 க்கும் மேற்பட்ட கல் சிற்ப தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கல் சிற்பம் செய்வதைத் தவிர வேறு தொழில் தெரி யாது. இதனால் கல் சிற்ப தொழிலை நம்பி வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. இதனால் உலகப் புகழ்பெற்ற மயிலாடி சிற்பக் கூடங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் மயிலாடி கல் சிற்பத் தொழிலாளர்களில் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு எளிதாக கற்கள் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கல்சிற்ப தொழிலாளர்களின் வாழ்க்கை புதுப் பொலிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மயிலாடி சிற்பங்களுக்கு கற்கள் கிடைக்குமா? தொழிலாளர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : Ammi-Kulavi ,Idical ,
× RELATED ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு