×

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் 7 நாள் காவல் கேட்டிருந்த நிலையில் ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டுள்ளார். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். பெண் காவலர்கள் பற்றி அவர் அவதூறான சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதுதொடர்பான புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கடந்த 4ம் தேதி கைது செய்தது.

தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சவுக்கு சங்கரின் காரில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக தேனி பிசிபட்டி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின. அதாவது பெண் காவலர்கள் குறித்த அவதூறு கருத்து தொடர்பாக கோவையை தொடர்ந்து சேலம், சென்னை, திருச்சியில் சைபர் கிரைம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் சவுக்கு சங்கருக்கு ஓராண்டு வரை ஜாமீன் கிடைக்காது.

அவர் சிறையிலேயே தான் இருக்க வேண்டும். இந்நிலையில் தான் திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கு தொடர்பாக சவுக்க சங்கர் நேற்று கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி மகிளா நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது திருச்சிபோலீசார் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தனர். பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தி உத்தரவிடுவதாக நீதிபதி ஜெயப்பிரதா தெரிவித்து இருந்தார். இதையடுத்து இன்று மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா அந்த மனு மீது விசாரணை மேற்கொண்டார். அப்போது சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர், ‛‛சவுக்கு சங்கரை போலீஸ் கஸ்டடியில் வழங்க கூடாது. வழங்கினால் அவர் தாக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி கூடாது” என வாதிடப்ட்டது.

அதேவேளையில் போலீஸ் சார்பில், ‛‛வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் விசாரிக்க வேண்டும். இதனால் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் நாளை மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவால் சவுக்கு சங்கரை திருச்சி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

The post பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trichy court ,YouTuber ,Chavuk Shankar ,CHENNAI ,Chavik Shankar ,Trichy ,YouTuber Chavik Shankar ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...