×

மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி

சேலம்: மின் கம்பங்களில் ஏறி பணிபுரியும் ஊழியர்கள், விபத்தில் சிக்குவதை தவிர்க்க வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்சாரவாரியத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பருவ மழைக்காலம், புயல் என எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மின்தடையை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேங்மேன்கள் எந்நேரமாக இருந்தாலும் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிபார்க்கின்றனர். அப்போது சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கநேரிடுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின் கம்பத்தில் ஏறும்போதே, கம்பிகளில் மின்சாரம் இருப்பதை கண்டறிய, `வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ என்ற புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின் காந்த அலை மற்றும் சென்சார் மூலம் இக்கருவி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது மின் கம்பத்தில் ஏறும் ஊழியர்கள், தங்களது கையில் அல்லது தலை ஹெல்மெட்டில் இந்த கருவியை பொருத்திக் கொள்ளவேண்டும். கம்பத்தின் உயரத்திற்கு செல்லும்போது, சுமார் 3 அடி தூரத்தில் மின் ஓட்டம் இருப்பது, அந்த கருவியில் உள்ள சென்சார் மூலம் தெரியவந்து உடனடியாக ஒளியுடன் கூடிய எச்சரிக்கை ஒலி எழுப்பும். அப்போது மின் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு விபத்தில் இருந்து தப்பிக்கலாம். முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 95 பிரிவு அலுவலகங்களுக்கும் தலா 5 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 475 வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி கூறியதாவது; மின் கம்பங்களில் ஏறி பணிபுரியும் கேங்மேன்கள் தவறுதலாகவோ கவனக்குறைவு காரணமாகவோ மின் ஓட்டம் உள்ள பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது மின் விபத்து ஏற்படுகிறது.

இதனால் எதிர்பாராத உயிரிழப்ைப சந்திக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்த `வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் கம்பத்தில் ஏறும்போது, கையில் கடிகாரம் போல இதனை கட்டிக்கொள்ளலாம். கம்பத்தில் மின் ஓட்டம் இருந்தால், 3 அடிக்கு முன்னதாகவே அந்த கருவி ஒளியுடன் ஒலி எழுப்பி எச்சரிக்கை விடுக்கும். அதை வைத்து மின் ஊழியர்கள் விபத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்படும். மின் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது இதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இந்த கருவியை பயன்படுத்தாமல் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

The post மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu Electricity Board ,Dinakaran ,
× RELATED மின் இழுவை கம்பிகளில் கால்நடைகளை...