×
Saravana Stores

மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்

ராமநாதபுரம், மே 16: ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்ததால் விவசாயிகள், பனை மர தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம், பாம்பன்,தங்கச்சிமடம், மண்டபம், ராமநாதபுரம், தொண்டி, திருவாடானை, திருப்புல்லாணி, நயினார்கோயில், சத்திரக்குடி,பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, பெருநாழி, கோவிலாங்குளம், மண்டலமாணிக்கம், திருஉத்தரகோசமங்கை, சாயல்குடி, ஏர்வாடி, சிக்கல், வாலிநோக்கம், கடலாடி, முதுகுளத்தூர் அனைத்து பகுதியிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் சித்திரை மாதத்தில் கோடை உழவு மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் காலம் கடந்து வைகாசி முதலில் பெய்ததால், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி டிராக்டரை கொண்டு உழும் அளவிற்கு போதிய ஈரப்பதம் உள்ளது. இதனால் கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், கூலி தொழிலாளிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியானது. மழை ஈரப்பதத்தால் புல், செடிகள் வளர துவங்கும். இதனால் கால்நடை வளர்ப்போரும் மகிழ்ச்சியானார்கள்.

இதுபோன்று மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் போர்வெல் தண்ணீர் உதவியுடன் கோடை விவசாயமாக பருத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பருத்திக்கு உரம் இடும் பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். மழை தண்ணீரால் பருத்தி நன்றாக விளையும் என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பதனீர் சீசன் துவங்கி கருப்பட்டி காய்ச்சும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் பதனீர் உற்பத்தி குறைந்து கருப்பட்டி தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போதைய மழைக்கு பதனீர் உற்பத்தி அதிகரிக்கும் என பனைமர தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான கோடை மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி ஈரப்பதம் உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய நிலங்களில் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். மழை நீர் வீணாகாமல் சேமிக்கலாம். மண் கிளறப்படுவதால் மண்ணின் தன்மை மாறி காற்றோட்டம் ஏற்படும். நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மண்ணில் புதைந்து கிடக்கும் பூச்சி முட்டை அழிக்கப்படும். களை செடிகளின் விதைகளும் அழிக்கப்படும். இதனால் பருவ கால விவசாயத்திற்கு அதிக நன்மைகள் உண்டு. மேலும் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இயற்கை உரம் இட்டு உழவு பணி மேற்கொண்டால் பூச்சிகளின் தாக்கம் குறையும். கடைசி உழவின் போது டை அமோனியம் பாஸ்பேட், பொட்டாஷ் போன்ற அடி உரங்களையும் இடலாம். எனவே இந்த கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

The post மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Tamil Nadu ,Rameswaram ,Pampan ,Thangachimadam ,
× RELATED பரமக்குடி அருகே ரயில் பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பலி