தேனி, மே 16: தேனியில் பழைய பஸ்நிலையத்தில் ஓடும் பஸ்சில் இருந்து 3 பவுன் தங்க செயின் உள்ளிட்ட பணபர்சை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், க.புதுப்பட்டி கோவிந்தன்கோயில் தெருவில் குடியிருப்பவர் பிச்சைமணி. இவரது மனைவி கீதா(47). இவர் தேனியில் உள்ள அரவிந்த் கண்மருத்துவமனைக்கு கண்பரிசோதனைக்காக வந்தார். பரிசோதனை செய்து விட்டு, இவரும், இவரது மகன் குருமூர்த்தி, சகோதரி பரிமளா ஆகியோர் தேனி பழைய பஸ் நிலையம் சென்றனர். அங்கிருந்து ஆண்டிபட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினர்.
அப்போது, கீதா அவருடைய கைப்பையில் வைத்திருந்த பர்சில் 3 பவுன் தங்க செயின், ரூ.700 ரொக்கப்பணம், கீதா மற்றும் அவரது கணவரின் வங்கிக்கணக்கு ஏடிஎம் கார்டுகள் வைத்திருந்தார். பஸ்சில் பயணித்தபோது, டிக்கட் எடுப்பதற்காக பர்சை தேடியபோது, பர்ஸ் காணாமல் போனது தெரியவந்தது. பஸ்சில் ஏறும்போது, கீதாவை உரசிக்கொண்டு ஏறிய ஒருவர், கீதா சப்தமிட்டதும், ஓடும்பஸ்சில் இருந்து வேகமாக இறங்கி சென்று விட்டதாகவும், கீதாவை உரசிக்கொண்டு வேகமாக பஸ்சை விட்டு இறங்கிய நபர் பர்சை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகத்தில், தேனி போலீஸ் நிலையத்தில் கீதா புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெண் பயணியிடம் 3 பவுன் ‘அபேஸ்’ ஓடும் பஸ்சில் துணிகரம் appeared first on Dinakaran.