சென்னை: அண்மையில் பூமியை தாக்கிய சூரிய காந்தப் புயலின் தரவுகளை இஸ்ரோ பதிவு செய்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக கடந்த செப்.2ம் தேதி ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஆதித்யா விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., துாரத்தில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்1 லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் தனது பயணத்தை செப்.19ம் தேதி தொடங்கியது. எல்1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது முதல் விண்கலத்தில் உள்ள கருவிகள் படிப்படியாக செயல்பட தொடங்கி ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கியது. மேலும் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த ஜன.6ம் தேதி தனது இலக்கான லாக்ராஞ்சியன் புள்ளியில் ஒளிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன்மூலம் சூரியனை ஆராயும் இந்தியாவின் முதல் விண்வெளி திட்டம் என்ற சாதனையை ஆதித்யா விண்கலம் பெற்றது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி சூரியனில் இருந்து வெளிப்பட்ட காந்தப் புயல்களின் முக்கியமான தரவுகளை பூமி, நிலவு மற்றும் ஆதித்யா விண்கலம் சேகரித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் அந்த தரவுகள் குறித்தான முழுமையான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:
கடந்த 11 ஆம் தேதி சூரியனின் ஏஆர் 3664 என்ற குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து வெளிப்பட்ட சூரிய காந்தப் புயல் பூமியில் மிகப்பெரிய அளவில் தாக்கியது. இது குறித்தான எச்சரிக்கையை நாசா மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் எச்சரித்து இருந்தனர். குறிப்பாக செயற்கைக் கோள்கள், தகவல் தொடர்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில் இஸ்ரோவின் தரைத்தளம், ஆதித்யா எல் 1 விண்கலம், சந்திரயான் விண்கலம், நிலவு, விண்வெளி ஆகிய இடங்களில் சூரியனில் இருந்து வெளிப்பட்ட காந்தப் புயல்களின் முக்கியமான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள அஸ்பெக்ஸ் என்ற அறிவியல் ஆய்வு கருவியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தரவுகள் மூலமாக பூமிக்கு சூரியனில் இருந்து அதிகளவில் காந்த புயல் வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பூமியின் துருவப் பகுதி அதிகளவில் பாதிப்புக்குள்ளானதாக ஆதித்யா எல் 1 அனுப்பிய தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2003ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் இது என்றும், தற்போது ஏற்பட்ட சூரிய காந்தப் புயல் பூமியின் உயர் அட்ச ரேகையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த சூரிய காந்தப் புயலால் இந்திய பகுதி குறைந்த அளவே பாதிக்கப்பட்டது. ஏனென்றால், குறைந்த அட்சரேகை பகுதியில் இந்தியா இருப்பதால் பெரும்பாலும் பாதிப்புகள் ஏற்படவில்லை. பசிபிக் மற்றும் அமெரிக்க பகுதியில் சூரிய காந்தப் புயல் கடும் விளைவுகளை ஏற்படுத்தியதாக தரவுகளை தெரிவித்துள்ளது. இந்தியா சார்பில், இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா அல்லது சூரிய காந்தப் புயலால் ஏதேனும் சேதம் அடைந்ததா என்பதை தொடர்ந்து ஆதித்யா எல் 1 விண்கலம் மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post பூமியை தாக்கிய சூரிய புயல் சூரிய காந்தப்புயலின் தரவுகளை சேகரித்த இஸ்ரோ: விஞ்ஞானிகள் தகவல் appeared first on Dinakaran.