×
Saravana Stores

கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.43,000 கோடி நகை கடன் வழங்க இலக்கு: சுய உதவி குழுக்களுக்கு ₹5,100 கோடி கடனுதவி

சிறப்பு செய்தி
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தங்க நகை அடமானத்தில், நகைக்கடன் வழங்கப்படுகிறது. நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் அவசர தேவைக்காக அவர்களிடம் உள்ள தங்க நகைகளுக்கு ஈடாக இந்த கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைகடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த நகைகடன் திட்டம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் 2024-2025 நிதியாண்டில் நகைக்கடன் ₹43 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2024-2025ம் ஆண்டிற்கு கடன் குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை மாத வாரியாகவும், காலாண்டு வாரியாகவும், வட்டார வாரியாகவும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நிர்ணயம் செய்து கொள்ளலாம். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், மண்டல இணை பதிவாளர்கள் 2024-2025ம் ஆண்டிற்கு கடன் வழங்குதலில் நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டினை எய்திட செயல்திட்டம் தயாரித்து பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த குறியீட்டினை முழுமையாக செயல்படுத்த தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் கடன் வழங்குதல் மற்றும் வைப்புகள் சேகரித்தலில் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர குறியீட்டினை அந்தந்த மாதங்களிலேயே தொய்வில்லாமல் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன் ₹3 ஆயிரம் கோடியும், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் நகைக்கடன் ₹15 ஆயிரம் கோடியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன் ₹25 ஆயிரம் கோடியும் என மொத்தம் ₹43 ஆயிரம் கோடி நகைக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மூலம் சுய உதவி குழுக்களுக்கு ₹100 கோடியும், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சுய உதவி குழுக்களுக்கு ₹2 ஆயிரம் கோடியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுய உதவி குழுக்களுக்கு ₹3 ஆயிரம் கோடியும் என மொத்தம் ₹5,100 கோடி கடனுதவி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய கால முதலீட்டு கடன், பண்ணை சாராக்கடன், வீடு கட்ட கடன், வீடு அடமான கடன், தானிய ஈட்டுக்கடன் மாற்றுதிறனாளிகளுக்கு கடன் ஆகியவற்றுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதில் அதிக அளவில் தகுதியான பயனாளிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கிகளின் தினசரி முன்னேற்ற விவரம் குறித்து அறிக்கைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும்பட்சம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.43,000 கோடி நகை கடன் வழங்க இலக்கு: சுய உதவி குழுக்களுக்கு ₹5,100 கோடி கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Special News State Chief Cooperative ,Tamil Nadu ,District Central Cooperative Banks ,Start-up Agricultural Cooperative Credit Unions ,Dinakaran ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...