×

சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ்சில் துப்பாக்கி, அரிவாள் மீட்பு: கோவில்பட்டி வாலிபருக்கு வலை

நெல்லை: சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு விரைவு பஸ்சில் துப்பாக்கி மற்றும் அரிவாளை பறிமுதல் செய்த போலீசார், அதனை பஸ்சில் விட்டுச் சென்ற கோவில்பட்டி வாலிபரை தேடி வருகின்றனர்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு போக்குவரத்து கழக ஸ்லீப்பர் பஸ் புறப்பட்டு நெல்லைக்கு நேற்று காலை சென்றது. இதனை கோவில்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் (58) ஓட்டி வந்தார். களக்காடைச் சேர்ந்த நாராயணன் (40) கண்டக்டராக இருந்தார். நேற்று காலை 11.30 மணியளவில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிய டிரைவர் ராஜேந்திரன் பஸ்சை பராமரிப்பிற்காக வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக டெப்போவிற்குள் கொண்டு சென்று நிறுத்தினார். மதியம் 12.30 மணியளவில் டெப்போ ஊழியர்கள் பஸ்சை சுத்தம் செய்தனர். அப்போது பஸ்சின் 9வது பெர்த்தில் ஒரு வெள்ளை நிற துணிப்பை இருந்துள்ளது. அதனை திறந்து பார்த்தனர். அப்போது அதனுள் சுமார் இரண்டரை அடி நீள அரிவாள் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவை இருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் டெப்போ கிளை மேலாளர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் பாளை போலீசார் அரிவாள் மற்றும் துப்பாக்கியை மீட்டனர். அவற்றை ஆய்வு செய்தபோது அந்த துப்பாக்கி ஏர்கன் வகையை சேர்ந்தது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பஸ் முழுவதும் சோதனை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து ஒரு வாலிபர் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்து பஸ்சில் பயணம் செய்துள்ளார். அவர் அரிவாள் மற்றும் ஏர்கன்னை பெர்த்திலேயே வைத்துவிட்டு நேற்று காலை கோவில்பட்டியில் இறங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை பிடிக்க தனிப்படையினர் கோவில்பட்டி விரைந்துள்ளனர்.

இந்த அரிவாள் மற்றும் ஏர்கன் ஆகியவற்றை சென்னையில் ஏதேனும் சமூகவிரோத செயலில் ஈடுபட்ட நபர் கொண்டு வந்தாரா அல்லது நெல்லையில் சமூகவிரோத செயலுக்கு திட்டமிட்டு கூலிப்படையை சேர்ந்தவரால் கொண்டுவரப்பட்டதா, குற்ற பிண்ணனியுடைய நபர் எடுத்து வந்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசு விரைவு பஸ்சில் ஏர்கன் மற்றும் அரிவாள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ்சில் துப்பாக்கி, அரிவாள் மீட்பு: கோவில்பட்டி வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nella ,
× RELATED சாதி மறுப்பு திருமணம் செய்த...