×

பெரும்புதூர் – வாலாஜா இடையே மந்தகதியில் நடைபெற்று வரும் 6 வழிச்சாலை பணி: விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

காஞ்சிபுரம், மே 16: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பெரும்புதூர் – வாலாஜா இடையே 6 வழிச்சாலை அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் 2014ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018ம் ஆண்டின் இறுதியில் பணிகள் தொடங்கப்பட்டன. 5 ஆண்டுகளுக்கும் மேலாக 6 வழிபாதையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே தொடங்கிய சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், 50 சதவீத பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை. விரைவுச்சாலையாக மாற வேண்டிய இந்த சாலை தினந்தோறும் ஒரு விபத்து நடக்கும் சாலையாக மாறிவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான 71 கிமீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 2021ம் ஆண்டிற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை.

மேலும், ஆங்காங்கே துண்டு துண்டு துண்டாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திசையிலும் 1.25 லட்சம் ஊர்திகள் பயணிக்கின்றன. அவ்வளவு ஊர்திகள் பயணிப்பதற்கு 4 வழிச்சாலை போதுமானதாக இல்லை என்பதால் தான், அதை 6 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இந்நிலையில், சாலை முழுவதும் குண்டும் குழியுமாக சீர்குலைந்துள்ளன. சாலை எங்கு குறுகும், எங்கு திரும்பும் என்பதே தெரியாததாலும், சாலை விளக்குகள் இல்லாததாலும் ஒரு வினாடி கவனம் சிதறினாலும் விபத்து நடப்பதைத் தடுக்க முடியாது. வாலாஜா – பெரும்புதூர் இடையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிய 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024 ஆம் ஆண்டுவரை இந்த பகுதியில் சுமார் 1200 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் வழியாக பெரும்பத்தூர் வரை செல்லும் சாலைகளும் மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.

இங்கே பல மோட்டார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் இருந்தும் கூட தேசிய நெடுஞ்சாலை துறை இதை சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.மேலும், இடைப்பட்ட கிராமங்களில் இருந்து நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணியும் மெத்தனமாக உள்ளது. பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான சாலையில் குண்டும் குழியுமாக நிறைந்ததாகவும் இருப்பதால், அதில் பயணிப்பது மிக மோசமான அனுபவமாக உள்ளது. அந்த பயணத்தின்போது விபத்துகள் நடப்பது, ஊர்திகள் பழுதடைவது உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இவற்றிலிருந்து பயணிகளுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பது தான் தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு திரும்புகிற இடங்களில் சிக்னல், எமர்ஜென்சி விளக்கு, அடையாள குறியீடுகள், சாலையில் உள்ள விளக்குகள் என எதுவுமே முழுமையாக இல்லாததால் இரவில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்புதூர் – காஞ்சிபுரம் நெடுஞ்சாலை விபத்துச்சாலை என்ற நிலையிலிருந்து விரைவுச்சாலையாக மாற்றப்பட வேண்டும். அதற்காக தடைபட்டுக் கிடக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து, குறித்த காலத்திற்குள் முடித்து 6 வழிச்சாலையில் ஊர்திகள் செல்வதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post பெரும்புதூர் – வாலாஜா இடையே மந்தகதியில் நடைபெற்று வரும் 6 வழிச்சாலை பணி: விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Perumbudur ,Walaja ,Mandakathi ,Kanchipuram ,Chennai-Bengaluru National Highway ,Perumbudur ,Mantakathi ,Kanchipuram… ,
× RELATED பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான...