×

சென்னை ஐஐடியின் வளாக நேர்காணல்: பி.டெக், இரட்டை பட்டப்படிப்பில் 80% மற்றும் முதுநிலையில் 75% பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: சென்னை ஐஐடியின் வளாக நேர்காணல் மூலம் கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் அதிகப்படியான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐஐடிக்களில் படித்து முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார்போல், சென்னை ஐஐடி நிர்வாகமும், 2023-24ம் ஆண்டுக்கான வளாக நேர்காணல் குறித்த விவரங்களையும் வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வளாக நேர்காணல் குறித்த விவரத்தை சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், 2023-24ம் ஆண்டில் முதல் மற்றும் 2ம் கட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்ட வளாக நேர்காணலில் 256 நிறுவனங்கள் பங்கு பெற்று 1,091 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியிருப்பதாகவும், அதில் ஜப்பான், ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வாய்ப்புகளையும், 85 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 183 வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்த வேலைவாய்ப்புகளில் முக்கிய துறைகளில் 43 சதவீதமும், மென்பொருள் சார்ந்த துறைகளில் 20 சதவீதமும், பகுப்பாய்வு, நிதி, ஆலோசனை மற்றும் தரவு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவும் வேலைவாய்ப்புகள் மாணவ-மாணவிகளுக்கு வளாக நேர்காணலில் கிடைத்து இருக்கின்றன.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பி.டெக், இரட்டை பட்டப்படிப்பு மாணவர்களும், 75 சதவீதத்துக்கும் அதிகமான முதுநிலை மாணவர்களும் இந்த வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் எனவும், கடந்த 2 ஆண்டுகளில் 90 சதவீதம் பி.டெக்., இரட்டை பட்டப்படிப்பு பட்டதாரிகள் தொழில் வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள் எனவும் சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து பேசிய சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி: வேலைவாய்ப்புகளில் கடந்த ஆண்டின் நிலையே இந்த ஆண்டிலும் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பாதை பற்றி எந்த பெற்றோரும் கவலைப்பட தேவையில்லை. வேலைவாய்ப்பு என்பது முக்கிய வாழ்க்கை பாதையாக இருந்தாலும், மாணவர்களில் அதிகமானோர் தொழில் முனைவோராக வந்து அவர்கள் வேலைவாய்ப்புகளை வழங்குபவர்களாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்’ என தெரிவித்தார்.

The post சென்னை ஐஐடியின் வளாக நேர்காணல்: பி.டெக், இரட்டை பட்டப்படிப்பில் 80% மற்றும் முதுநிலையில் 75% பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,CHENNAI ,IIT Chennai administration ,IITs ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை...