×
Saravana Stores

ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்

டெஹ்ரான்: ஈரானில் வெவ்வேறு வழக்குகளில் கடந்த 8 மாதமாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய கப்பல் ஊழியர்கள் 40 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தி உள்ளார். ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை அடுத்த 10 ஆண்டுகள் நிர்வாகிக்கும் நீண்ட கால ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த 13ம் தேதி கையெழுத்திட்டது. இதற்காக ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியானை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. ஈரானில் வெவ்வேறு வழக்குகளில் 4 வணிக கப்பலில் பயணித்த சுமார் 40 இந்திய கப்பல் பணியாளர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 8 மாதமாக தவித்து வரும் அவர்களை விடுவிக்க வேண்டுமென அமைச்சர் சோனோவால் வலியுறுத்தினார். இந்தியர்களை விடுவிக்க ஈரான் அரசு சாதகமாக இருப்பதாகவும், சில சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதால் அது தாமதமாவதாகவும் ஈரான் அமைச்சர் கூறி உள்ளார். இது இந்தியர்களை மீட்க தூதரக ரீதியாக இந்தியா மேற்கொள்ளும் 2வது முயற்சி.

The post ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Iran ,Union Minister ,Tehran ,Sabahar ,Dinakaran ,
× RELATED ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்