×

8வது வெற்றியா… ஆறுதலா? சன்ரைசர்ஸ் – டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை

ஐதராபாத்: ஐபிஎல் டி20 தொடரின் 66வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், 12 ஆட்டங்களில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளதுரன் தொடர்ந்து பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் இன்று குஜராத்தையும், மே 19ம் தேதி பஞ்சாப் அணியையும் எதிர்கொள்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் 1 புள்ளி (போட்டி ரத்தானால்) அல்லது ஒரு வெற்றி போதுமானது பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய. இரண்டிலும் தோல்வி என்றால் மட்டுமே மற்ற முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

2 போட்டிகளையும் சொந்த மைதானத்தில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் ஐதராபாத் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் பெயரைக் கேட்டாலே எதிரணி பவுலர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோகும் அளவுக்கு அவர்களின் அதிரடி ஆட்டம் மிரட்டுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து லக்னோ சூப்பர் ஜயன்ட்சை அடித்து துவைத்து காயப்போட்டது டி20 வரலாற்றில் நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ் என்றால் மிகையல்ல. அடுத்து வரும் ரெட்டி, கிளாஸன், சமத்,ஷாபாஸ், சன்விர், கம்மின்ஸ் ஆகியோரும் அதிரடியில் சளைத்தவர்கள் இல்லை.

புவி, கம்மின்ஸ், ஷாபாஸ், உனத்கட் வேகக் கூட்டணியும், விஜயகாந்த் வியாஸ்காந்த் சுழலும் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். அதே சமயம் குஜராத் 13 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு ரத்து என 11 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்தாலும், மழை காரணமாகவே பிளே ஆப் வாய்ப்பை பறிகொடுக்க நேர்ந்தது. ஆனாலும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும் முனைப்புடன் உள்ளது. இரு அணிகளுமே வெற்றியை குறி வைத்து முட்டி மோதுவதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

The post 8வது வெற்றியா… ஆறுதலா? சன்ரைசர்ஸ் – டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Sunrisers ,Titans ,Hyderabad ,Gujarat ,IPL T20 ,Pat Cummins ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!