- தமிழ்நாடு அரசு
- மதுரை
- Icourt
- வழக்கறிஞர்
- தீரன் திருமுருகன்
- தமிழ்நாடு மீனவர்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு
மதுரை: போதைப் பொருள் ஒழிப்பில் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் கடந்த ஏப். 22ம் தேதி, 7 பேர் மது போதையில் பிரச்னை செய்து அவ்வழியாக வந்தவரை தாக்கினர். எனவே, ஒத்தக்கடை, ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கவும், போதை பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘சம்பந்தப்பட்ட வழக்கில் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட ஆய்வாளரே ஐகோர்ட் கிளை காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், ‘‘பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கஞ்சா மட்டுமின்றி ஹெராயின் உள்ளிட்ட பிற போதைப்பொருட்களும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023ல் மட்டும் ரூ.1 கோடியே 43 லட்சத்து 52 ஆயிரத்து 957 மதிப்பிலான பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 7,389 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டும்தான் மாவட்ட வாரியாக உதவி கமிஷனர் அல்லது டிஎஸ்பி தலைமையில் போதை தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒன்றிய அரசின் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் தான் குறைவான அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒத்தக்கடை பகுதியை பொறுத்தவரை 2019 முதல் கடந்த ஏப்ரல் வரை 49 போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,070.670 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறிய நீதிபதிகள், தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி, விரிவான உத்தரவை பிறப்பிப்பதற்காக வழக்கை ஒத்திவைத்தனர்.
* ‘கோயில் அனைவருக்கும் பொதுவானது அனைத்து சமூகத்தினரும் வழிபட நடவடிக்கை’
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வெள்ளபொம்மன்பட்டியில் ஸ்ரீபகவதியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், மாாியம்மன் கோயில்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளன. இக்கோயில்களில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா மே 19ம் தேதி நடக்கவுள்ளது. இதில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை சேர்க்காமல், தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். எனவே திருவிழாவில் அனைத்து சமூகத்தினரும் கலந்துகொண்டு வழிபட அனுமதிக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர், ‘‘கோயில் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. எனவே, அனைத்து சமூகத்தினரும் திருவிழாவில் கலந்துகொள்வதற்கும், வழிபாடு செய்யவும் அரசு தரப்பில் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் குறிப்பிடுவது போல தீண்டாமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து, வேடசந்தூர் தாசில்தார் விாிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். கோயில் நிர்வாகத்தினருடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.
The post போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளை பாராட்டு appeared first on Dinakaran.