×

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்சை டிரைவர் பின்னோக்கி இயக்கியதில் பயணி பலி

கோவை: காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் குடிபோதையில் பஸ்சை பின்னோக்கி டிரைவர் இயக்கியதில் பயணி பலியானார். கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை தனியார் டவுன் பஸ் நின்றிருந்தது. அந்த பஸ்சில் இருந்த டிரைவர் திருநாவுக்கரசு (40), திடீரென பின்னோக்கி இயக்கினார். அந்த நேரத்தில் கண்டக்டர் சிலம்பரசன் அங்கு இல்லை. பஸ்சுக்காக பின்னால் காத்து நின்ற பயணிகளை டிரைவர் கவனிக்கவில்லை. பின்னோக்கி வந்த பஸ் அங்கு நின்றிருந்த ஊட்டியை சேர்ந்த சிவக்குமார் (40) என்ற பயணி மீது மோதி, மற்றொரு பஸ் மீது மோதி நின்றது. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது.

இரு பஸ்சுக்கும் இடையில் சிக்கி நசுங்கி பயணி சிவக்குமார் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தால் பஸ் ஸ்டாண்டில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கோபமடைந்த இதர பஸ் ஊழியர்கள் திருநாவுக்கரசை பிடித்து சரமாரியாக தாக்கினார். தகவலறிந்து காட்டூர் போலீசார் வந்து, பஸ் ஊழியர்களிடம் இருந்து திருநாவுக்கரசை மீட்டனர். பஸ்சை பின்னோக்கி இயக்கும்போது திருநாவுக்கரசு மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்சை டிரைவர் பின்னோக்கி இயக்கியதில் பயணி பலி appeared first on Dinakaran.

Tags : Kandipuram bus ,Gowai KOWAI ,GANDHIPURAM BUS ,Gowai Gandhipuram ,Thirunavukarasu ,Kandipuram Bus Stand ,Goa ,
× RELATED காந்திபுரம் பேருந்து நிலையத்தில்...