×

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

டெல்லி: இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 10-ந்தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து டெல்லியில் மக்களவை தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், டெல்லி சாந்தினி சவுக் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; நான் சிறையிலிருந்து நேராக உங்களிடம் வந்துள்ளேன். பாஜகவினர் என்னை சிறையில் அடைத்தபோது உங்களை பிரிந்து மிகவும் வருத்தமடைந்தேன். டெல்லி மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு சாதாரண நபர். நமது ஆம் ஆத்மி கட்சியானது டெல்லி மற்றும் பஞ்சாபில் மட்டுமே ஆட்சி செய்துவரும் சிறிய கட்சியாகும். என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் செய்த தவறு என்ன? பாஜகவைப் பொறுத்தவரை, நான் ஏழை மக்களுக்காக தரமான பள்ளிகள், இலவச கல்வி, 24 மணி நேர மின்சாரம் உள்ளிட்டவற்றை கொடுத்ததுதான் நான் செய்த தவறாகும்.

இப்பொழுது நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் வாக்கு செலுத்தும்போது, கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா? என்று சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ந்தேதி சிறைக்கு செல்ல வேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள். நான் சிறையில் இருந்தபோது என் மன உறுதியை உடைப்பதற்கு பல முயற்சிகள் நடந்தன. ஆனால் கடவுள் அனுமாரின் ஆசீர்வாதத்தால் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

The post நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Bajgaon ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Department ,BJP ,
× RELATED மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த...