×
Saravana Stores

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

திருச்சி: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு அவரை போலீஸ் காவலில் கோரிய மனு மீதான உத்தரவு நாளை பிறப்பிக்கப்பட உள்ளதால் சவுக்கு சங்கரை கோவைக்கு பதில் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை, சேலம், சென்னையை தொடர்ந்து திருச்சி சைபர் க்ரைம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் சவுக்கு சங்கர் அடுத்த ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாது. இதற்கிடையே தான் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கோவை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதன்பிறகு அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தான் பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் சவுக்கு சங்கர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் போலீஸ் வாகனத்தில் திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளத்தில் பேசும்பொருளானது. அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இந்த வேளையில் வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நாளை மதியம் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி ஜெயப்பிரதா தெரிவித்தார். அதோடு சவுக்கு சங்கரை வரும் மே 28ம் தேதி வரை நீதிமன்ற சிறையில் அடைக்க நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார். மேலும் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீஸ் தாக்கல் செய்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. அதனால் சவுக்கு சங்கரை திருச்சி மத்திய சிறையிலேயே அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

முன்னதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது அவர் பெண் காவலர்கள் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். பெண் காவலர்கள் கையை முறுக்கி தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனை பதிவு செய்த நீதிபதி சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தான் மே 28 வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோரும் போலீசாரின் மனு மீது நாளை மதியம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இதனால் நாளைய தினம் சவுக்கு சங்கர் தரப்புக்கு முக்கிய நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Shavuk Shankar ,
× RELATED யூடியூபர் சவுக்கு சங்கருக்கு குமரி நீதிமன்றம் ஜாமீன்..!!