×

சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் விரைவில் இயக்கம்

சென்னை: சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கடற்கரை-வேலூர் கண்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த பயணிகள் ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி,சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை 19 ஆண்டுகளுக்கு பின்னர் மே 2ம் தேதி முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு இரவு 12.05 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50க்கு சென்னை வந்தடைகிறது. சுமார் 6 மணி நேரம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மின்சார ரயிலில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயிலில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்ல கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் குறைவாகவும், ரயிலில் விரைவாகவும் செல்லலாம் என்பதால் இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்ல இந்த ரயிலை அதிகளவிலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், இந்த மின்சார ரயிலில் கழிவறை வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 6 மணி நேரம் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே, இந்த ரயிலில் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கழிவறையுடன் கூடிய ரயில் பெட்டிகளை இந்த மின்சார ரயிலில் இணைத்து இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், கழிவறையுடன் கூடிய மின்சார ரயில்கள் பெட்டி தயாரிக்கும் பணி ஐ.சிஎப்-ல் விரைவில் தொடங்க உள்ளது. பெட்டிகள் முழுமை அடைந்தவுடன் கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் விரைவில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai beach ,Tiruvannamalai ,Chennai ,Vellore ,
× RELATED சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும்...