×

வெற்றிக்கு வித்திடும் குலதெய்வ வழிபாடு!

ஒருவரை மூன்று தெய்வங்கள் காப்பதாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர். அவை, நாம் இருக்கின்ற பகுதியில் உள்ள காவல் தெய்வம் என்று சொல்லக்கூடிய எல்லை தெய்வம். சில தெய்வங்கள் சிலருக்குப் பிடித்து, அடிக்கடி அந்த தெய்வத்தை வழிபடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், வரும் இஷ்டதெய்வம். ஒருவரின் தலைமுறைகளையும், குடும்பத்தையும் காக்கும் குலதெய்வம். மூன்று தெய்வங்களில், உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் சந்ததியையும் எப்பொழுதும் அனுகிரகித்துக் காத்து நிற்பது மட்டுமின்றி, உங்கள் வாரிசுகளும் தழைத்து நிற்கவும், தலைமுறை தலைமுறையாக சிருஷ்டித்து, வாரிசுகளைக் கொண்டு வரும் தெய்வம் குலதெய்வமாகும். தொடர்ந்து, நம்மை பின்தொடர்ந்து காத்து நிற்பதற்குத் துணை நிற்கக்கூடிய தெய்வம், நம்மை என்றும் வளர்த்துக்கொண்டே இருக்கும். இடர்பாடுகளும், பிரச்னைகளும் வரும் தருணத்தில், நம்மை விழிப்படைய செய்து, அந்த பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவதே கடமையாகக் கொண்டுள்ளது.

ஜோதிடத்தில் குலதெய்வம்

ஜோதிடத்தில் குலதெய்வம் என்பது ஐந்தாம் பாவகம் (5ம்), ஒன்பதாம் பாவகம் (9ம்) மற்றும் லக்னம் (1ம்) பாவகம் குலதெய்வத்தை சுட்டிக் காட்டுகிறது. ஐந்தாம் பாவகத்தை பார்க்கும் கிரகம், ஐந்தாம் அதிபதியுடன் தொடர்பு கொள்ளும் கிரகம் ஆகியவை அனைத்தும் குலதெய்வத்தின் விவரங்களை நமக்கு ஒன்றன்பின் ஒன்றாக சொல்லும். ஐந்தாம் பாவகத்தில் அமர்ந்த கிரகம், ஐந்தாம் பாவகத்தை பார்க்கும் கிரகம் எல்லாம் குலதெய்வத்தை சுட்டிக்காட்டும். குலதெய்வம் இருக்கும் ராசியின் அடிப்படையிலும், அதனைச் சுற்றியிருக்கும் அடிப்படையிலும் குலதெய்வத்தை அறியலாம்.

குலதெய்வத்தை எப்படி? எப்போதெல்லாம் வழிபட வேண்டும்?

வீட்டில் நடைபெறும் எந்த சுபகாரியமாக இருந்தாலும், குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டுப் பின், சுபகாரியங்களை செய்வது சிறப்பானதாகும். குறைந்தபட்சம், வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் சென்று, உங்கள் குலதெய்வ முறைகளை பின்பற்றி, வழிபாடு செய்வது சிறப்பானது. வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அந்தக் குழந்தையை கட்டாயம் குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துச் சென்று, முறையான வழிபாடு செய்வது அவசியம். நமக்கு குழப்பமான காலகட்டங்களிலும், பிரச்னையான நேரங்களிலும், தீர்வுகளுக்காக குலதெய்வத்திடம் சென்று வழிபாடு செய்வது சிறப்பு.

ஜோதிடத்தின்படி குலதெய்வம் தெரியாமலோ அல்லது மறைந்துபோவது ஏன்?

ஜோதிடத்தில், ஐந்தாம் பாவக அதிபதி நீசம் ஏற்பட்டாலும், குலதெய்வக் கோயில் மறைவதற்கோ, செல்ல முடியாமல் இருப்பதற்கோ வாய்ப்புகள் உண்டு. ஐந்தாம் பாவக அதிபதி, சத்ருஸ்தானம் (6ம்) என சொல்லக்கூடிய ஆறாம் பாவத்தில் இருந்தாலும், அஷ்டமஸ்தானம் என சொல்லப்படும் (8ம்) எட்டாம் பாவத்தில் இருந்தாலும், விரயஸ்தானம் என சொல்லக்கூடிய (12ம்) பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தாலும், குலதெய்வம் தெரியாமலிருக்கும் அல்லது தெரிந்தாலும், போக எண்ணம் ஏற்படாது அல்லது குலதெய்வம் மறைந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. ஐந்தாம் பாவத்தில் ராகு கேதுக்கள் தொடர்பு ஏற்பட்டால், சில நேரங்களில் குலதெய்வத்தை மாற்றி வழிபடும் வாய்ப்புகளும் உண்டு.நமக்கு துன்பமான காலம் நெருங்கும் போதோ அல்லது கர்ம வினைகளை நாம் அனுபவிக்க வேண்டும் என்ற விதி ஏற்படும்போது, குலத் தெய்வத்தைப் பற்றிய சிந்தனை நமக்கு வராது. சில குடும்பங்களில், குலதெய்வம் என்று நினைத்துக் கொண்டு பலவற்றை வணங்குவர். காரணம், குலதெய்வம் என்பது பன்னிரெண்டு தலைமுறைகள் தொடர்ந்து வரும். பின்பு மறைந்து போகும் என்பது பெரியோர்களின் வாக்கு. அதன்பின், மற்றொரு குலதெய்வத்தை வணங்க வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கும். ஏவல், செய்வினை செய்பவர்கள், முதலில் யாருக்கு அதைச் செய்கிறார்களோ அவர்களின் குலதெய்வத்தை அறிந்து, முதலில் அதற்குதான் கட்டுப் போடுவார்கள் என சொல்லப்படுகின்றது.

குலதெய்வமும் 1 ,5, 9ம் பாவகமும்
உங்கள் ஜாதகத்தில், ஐந்தாம் பாவகத்தில் அமர்ந்த கிரகம் உங்கள் குலதெய்வத்தையும், அது அமர்ந்திருக்கும் சூழ்நிலைகளையும், பெயரையும், கண்டிப்பாக சொல்லும்.
ஐந்தாம் பாவகத்தில் (5ம்) சூரியன் இருந்தால் அல்லது பார்த்தால், சிவனையோ அல்லது ஆண் தெய்வங்களையோ குறிப்பிடும்.
ஐந்தாம் பாவகத்தில் (5ம்) சந்திரன் இருந்தால் அல்லது பார்த்தால், பெண் தேவதையான அம்பாளை குறிப்பிடும்.
ஐந்தாம் பாவகத்தில் (5ம்) செவ்வாய் இருந்தால் அல்லது பார்த்தால், முருகனையோ அல்லது சக்தி ஸ்வரூபமான தெய்வங்களையோ அல்லது கையில் ஆயுதங்கள் ஏந்திய தெய்வத்தை குறிப்பிடும்.
ஐந்தாம் பாவகத்தில் (5ம்) புதன் இருந்தால் அல்லது பார்த்தால், மகாவிஷ்ணுவை குறிப்பிடும்.
ஐந்தாம் பாவகத்தில் (5ம்) வியாழன் இருந்தால் அல்லது பார்த்தால், பிரம்மாவையோ அல்லது குரு போன்ற அமைப்புடைய தெய்வத்தையோ குறிப்பிடும். அந்த தெய்வம், யானை மீதும் அமர்ந்திருக்க வாய்ப்புண்டு. லிங்கத்தை வழிபடும் வாய்ப்புகளும் ஏற்படும்.
ஐந்தாம் பாவகத்தில் (5ம்) சுக்கிரன் இருந்தால் அல்லது பார்த்தால், பெண் தேவதையான அம்பாளை குறிப்பிடும்.
ஐந்தாம் பாவகத்தில் (5ம்) சனி இருந்தால் அல்லது பார்த்தால் கறுப்பு காவல் தெய்வங்களையும், ஐயனார் தெய்வங்களையும், சாஸ்தாவையும் குறிப்பிடும்.
ஐந்தாம் பாவகத்தில் (5ம்) ராகு கேது என்ற சாயா கிரகங்கள் இருந்தால், குலதெய்வம் சர்ப்பங்களுடன் மாறுபட்ட உருவத்துடன் இருப்பதைக் குறிப்பிடும்.
ஐந்தாம் பாவகத்தில் சிலருக்கு யுத்த கிரகங்கள் இருந்தால், இவர்கள் அந்தக் கோயிலுக்குச் சென்றாலோ அல்லது குழந்தையின் வளர்ச்சிக்கு முயற்சி எடுக்கும் பட்சத்தில் சண்டை ஏற்படும்.
மேலும், இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், வலிமையான கிரகத்தின் துணைகொண்டு, மற்ற கிரகங்களையும் இணைத்து, குலதெய்வத்தின் சொரூபத்தை அறியலாம்.

 

The post வெற்றிக்கு வித்திடும் குலதெய்வ வழிபாடு! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கண்குறை நீக்கும் கண்ணிறைந்த பெருமாள்