×

கடத்தூர் அருகே பராமரிப்பு பணியின்போது ஒர்க்கிங் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு: 4 மணி நேரம் ரயில்வே கேட் பூட்டப்பட்டது

கடத்தூர்: கடத்தூர் அருகே, ரயில்வே கேட்டின் முன் லெவல் கிராசிங், சிக்னல் பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்த ஒர்க்கிங் இயந்திரம் பொருத்திய ரயிலின் 2 சக்கரம் தடம் புரண்டது. ரயில்வே ஊழியர்கள் 2 மணி நேரம் போராடி, தடம்புரண்ட சக்கரத்தை நிலை நிறுத்தினர். 4 மணி நேரம் ரயில்வே கேட் பூட்டப்பட்டிருந்ததால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டி ரயில்நிலையம், சேலம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் வழியாக, தினசரி 70க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 30க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களும், 4 பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் -சென்னை மார்க்கமாகவும், சென்னை -சேலம் மார்க்கமாகவும் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையத்தில் 4 வழித்தடங்கள் உள்ளன. இதில், 2 வழித்தடம் மெயின் லைனாக(இருவழிப்பாதை) உள்ளது. மற்ற 2 வழித்தடம் சரக்கு ரயில் நிறுத்துவதற்கும், விரைவு ரயில்கள் நிறுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயில் நிலையம் அருகிலேயே ரயில்வே கேட் உள்ளது. ரயில்கள் வரும்போது கேட் மூடப்படும். இந்நிலையில், நேற்று மதியம் ரயில்வே கேட் பகுதியில் சிக்னல், லெவல் கிராஸ் மற்றும் அதனை சார்ந்த தொழில்நுட்பங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்தது.

இதற்காக சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து, சிக்னல் பழுது சீர் செய்யும் ஓர்க்கிங் இயந்திரம் பொருத்திய ரயில் கொண்டு வரப்பட்டது. மதியம் 1 மணிக்கு ரயில்வே கேட் பூட்டிய நிலையில் சிக்னல் மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்பங்கள் சீர்செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒர்க்கிங் இயந்திரம் பொருத்திய ரயிலின் 2 சக்கரங்கள் தடம் புரண்டது. இதையடுத்து, ஊழியர்கள் பணி செய்ய முடியாமல் தவித்தனர். மெயின் தண்டவாளத்தில் ரயில்கள் மெதுவாக செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சேலம் ரயில்வே கோட்ட பொறியாளர் அங்கீத்வர்மா தலைமையில் கோட்ட உதவி பொறியாளர் அவிநாஸ் மீனா, இன்ஜினீயர்கள் ஜவகர், வெங்கடேசன், காளியப்பன் உள்பட 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் 2 பெட்டி அடங்கிய தனி ரயிலில் சம்பவ இடம் விரைந்தனர்.

தொடர்ந்து மின் இணைப்பை துண்டித்து கிரேன் உதவியுடன் 2 மணி நேரம் போராடி தண்டவாளத்தில் ரயில் சக்கரத்தை தூக்கி நிறுத்தினர். மேற்கொண்டு பராமரிப்பு பணிகள் முடிந்ததும், மாலை 4 மணிக்கு ஒர்க்கிங் ரயில் சேலம் புறப்பட்டுச் சென்றது. ஒர்க்கிங் ரயில் தடம் புரண்டதாலும், மீட்பு பணிகள் நடந்ததாலும் மெயின் தண்டவாளத்தில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. ஆனால், 4 மணி நேரத்திற்கு பிறகே ரயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

 

The post கடத்தூர் அருகே பராமரிப்பு பணியின்போது ஒர்க்கிங் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு: 4 மணி நேரம் ரயில்வே கேட் பூட்டப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Kaduur ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 8 பேர் கைது