- திருச்செந்தூர் முருகன் கோயில்
- வைகாசி
- சுவாமி
- திருச்செந்தூர்
- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
- திருச்செந்தூர் சுப்பிரமணியம்
- இறைவன்
- முருகன்
- முருகன் கோயில்
- நிராடி
திருச்செந்தூர்: வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை முதல் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். முருகபெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். விடுமுறை நாட்கள், திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கானோர் இங்கு வந்து தரிசித்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதனிடையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கானோர் வந்து வழிபட்டு செல்லும் நிலையில் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாதம் நேற்று துவங்கியது. வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு இம்மாதத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக முதல் நாளான நேற்றும், செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை வழிபடுவதற்காகவும் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதலே கடலிலும், நாழிக்கிணறில் நீண்ட வரிசையிலும் நின்று புனித
நீராடினர்.
அதன் பிறகு இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையாளர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
* நடைதிறப்பு நேரத்தில் மாற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா வரும் 22ம் தேதி (புதன்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக திருவிழாவுக்கு முதல்நாளான மே 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அதேவேளையில் வைகாசி விசாக தினத்தன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதேபோல் விசாகத்திற்கு மறுநாள் மே 23ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வைகாசி மாத பிறப்பையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்: கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.