லக்னோ: எதிர்காலத்தையும் ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; எதிர்காலத்தையும் ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு ஜனநாயகத்தை காக்கவில்லை என்றால் அடிமைகளாகிவிடுவோம் என்று கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலைதூக்கினால் நமது கொள்கைகளை கொண்ட ஒருவரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் நிற்கும் தொகுதிகளில் எதிர்க்கட்சியினரை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐதராபாத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர், பெண்களின் புர்காவை விலக்கி சோதனை நடத்தியதை பார்த்தேன். நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்துவது இப்படித்தானா என்று கார்கே கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆட்சியில் இருக்கும் கட்சியை எதிர்த்து 26 கட்சிகள் ஒன்றிணைந்ததை நான் இதுவரை பார்த்ததில்லை என்றும், 26 கட்சிகள் ஒன்றுசேர்ந்து எதிர்க்கும் அளவுக்கு அரசு மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மோடி கூறுகிறார், ஆனால் 200 தொகுதியில் கூட பா.ஜ.க. வெல்லாது. பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு தேவையானதை விட அதிக தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்று கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
The post நாட்டின் அரசியல் சட்டத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும்.. ஜனநாயகத்தை காக்க தவறினால் அடிமைகளாகிவிடுவோம்: கார்கே எச்சரிக்கை!! appeared first on Dinakaran.