×
Saravana Stores

330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது : ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதிகள்

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருவதால் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே பைபாஸ் சர்ஜெரி செய்யப்பட்டுள்ளது. 330 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் உள்ளார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது. பல விசாரணை கைதிகள் 2 , 3 ஆண்டுகள் சிறையில் உள்ளனர்.,”என்றார். தொடர்ந்து அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post 330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது : ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதிகள் appeared first on Dinakaran.

Tags : Sentil Balaji ,New Delhi ,minister ,Senthil Balaji ,Jamin ,Enforcement Department ,
× RELATED முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட்...