×
Saravana Stores

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச பாட புத்தகம் அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில் ஜூன் மாதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச பாட புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைந்தவுடன், மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளன. இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய இலவச பாடபுத்தகங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு, அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக அனுப்பப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதிபள்ளி, ஆதிதிராவிட நல பழங்குடியினர் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக, தமிழக அரசு பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்ட அனைத்து பாடத்திட்டங்களுக்குண்டான புத்தகங்களும், கடந்த சில வாரத்திற்கு முன்பு கோட்டூர் ரோட்டில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு, மதுக்கரை, சுல்தான்பேட்டை தாலுகாவிற்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்களுக்கு 2024-2025ம் கல்வியாண்டிற்கான இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்புக் வினியோகிக்கும் பணி நேற்று முதல் துவங்கியது.

பள்ளி வாரியாக பாட புத்தகங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளுக்கு கல்வி மாவட்ட அலுவலர்கள் முன்னிலையில், பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான அனைத்து இலவச பாடப்புத்தகம் ஒரே நாளில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அந்தந்த வட்டார கல்வி அலுவலகம் மூலம், 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள துவக்கப்பள்ளி, 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. அந்த புத்தகமும் விரைவில், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கும்போது, மாணவர்களுக்கு வினியோக பணி நடைபெறுவதாகவும், கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச பாட புத்தகம் அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pollachi Education District ,Pollachi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற...