இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய பாத்திரங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் பின்னலாடை தொழிலுக்கு அடுத்தபடியாக பாத்திர தயாரிப்பு தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், தண்ணீர்பந்தல், அம்மாபாளையம் சுற்று வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான பாத்திர பட்டறைகள் இருந்து வந்தன.
ஆனால் தற்போது 300க்கும் குறைவான பாத்திர பட்டறைகள் மட்டுமே உள்ளன. இங்கு சில்வர், பித்தளை, காப்பர் ஆகியவற்றின் மூலம் பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அண்டா, பானை, செம்பு, அரிக்கன் சட்டி, இட்லி பாத்திரம், பொங்கல் பானை உள்ளிட்டவைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாத்திர பட்டறைளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர உற்பத்தி மிகவும் தரமானதாக உலக அளவில் பெயர் பெற்றது.
இங்கிருந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அதிகளவு பாத்திரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது. பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் அதிகரிக்க தொடங்கியது முதலே பாத்திர பொருட்களின் பயன்பாடு குறைந்துவிட்டது.
திருமண சீர்வரிசைக்கு பாத்திரங்களை அடுக்கி வைத்த நிலை மாறி, இன்று அந்த இடத்தை பிளாஸ்டிக், பீங்கான், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதனால் பாத்திர ெதாழிலும் பாதிப்படைய தொடங்கிவிட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மூலப் பொருட்களின் விலை உயர்வு, பாரம்பரிய தொழில் கலைஞர்கள் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாகவும் பாத்திரம் உற்பத்தி தொழில் மிகவும் நலிவடைந்த நிலைக்கு சென்றது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் இந்த தொழில் மேலும் நலிவடைந்துள்ளது.
வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்துவிட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதின் காரணமாக வெளிமாநிலங்களுக்கு பாத்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை. அவ்வாறு கொண்டு சென்றால் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களாக கொடுக்க கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் நிலைய உள்ளது. இதனால், வெளிமாநில வியாபாரிகள் தற்போது பாத்திரங்களை கொள்முதல் செய்வதற்காக திருப்பூருக்கு வருவதில்லை. இதன் காரணமாக, உற்பத்தி செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் தேக்கமடைந்துள்ளன.
மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற இடங்களில் பாத்திரங்கள் தயாரிப்பு நவீன இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் குறுகிய காலத்தில், விதவிதமான பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், திருப்பூரில் பழைய முறையிலேயே குடிசை தொழிலாக பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுவும் தொழில் நலிவடைய காரணமாக கருதப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் வட்டார எவர்சில்வர் பாத்திர பட்டறைதாரர் சங்கத் தலைவர் துரைசாமி கூறுகையில், “100 ஆண்டுகளுக்கும் மேலாக அனுப்பர்பாளையம் பாத்திரம் தயாரிப்பு தொழில் பாரம்பரியமிக்க தொழிலாக இருந்து வருகிறது. பாரம்பரியமாக நாங்கள் இத்தொழிலை செய்து வருகிறோம். அனுப்பர்பாளையம் பாத்திரத்திற்கு என இந்தியா முழுவதும் நற்பெயர் இருந்து வந்தது. காலப்போக்கில் அவை முழுவதுமாக மாறி வருகிறது. பாத்திரத்தின் பயன்பாடு பொதுமக்களிடையே குறைந்துள்ளது.
தரத்தினைவிட பொதுமக்கள் கவர்ச்சியை நம்பி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதுவே பாத்திர தொழிலுக்கு மிகப்பெரும் வீழ்ச்சியாக மாறிவிட்டது. இந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வகையிலான தொழிலாளர்கள் இல்லாத நிலை வந்துவிட்டது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறை என்பதால் மாநிலங்களை கடந்து பாத்திரங்களை கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. 3 மாத தேர்தல் நடத்த விதிமுறை அமல் என்பதால் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
பாத்திரம் உற்பத்தி தொழிற்சங்க நிர்வாகி கூறுகையில், “தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் உற்பத்தி செய்யப்பட்ட பாத்திரங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதன் காரணமாக மீண்டும் உற்பத்தி செய்யும் பணி தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அந்த பணி கிடைக்காததால் தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளனர். ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடித்து இருந்தால் தேர்தல் நடத்தி விதிமுறை முடிவடைந்து வர்த்தகம் சீராக நடந்திருக்கும். தொழிலாளர்களுக்கு வேலை இழக்கக்கூடிய வாய்ப்பு தவிர்க்கப்பட்டு இருக்கும். தொழிலாளர்களின் நலனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.
The post தேர்தல் நடத்தை விதிமுறையால் பாத்திர உற்பத்தி தொழில் பாதிப்பு: கோடிக்கணக்கான சரக்குகள் தேக்கம் appeared first on Dinakaran.