×
Saravana Stores

தமிழ்நாடு முழுவதும் 894 இடங்களில் வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் 389 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு: 6.80 லட்சம் பறவைகளை பார்த்தனர்

சேலம்: தமிழ்நாடு முழுவதும் வனத்துறை சார்பில், 894 இடங்களில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 389 பறவை இனங்களை கண்டறிந்தனர். மொத்தமாக 6.80 லட்சம் பறவைகளை பார்த்து பதிவு செய்து, வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில், ஆண்டுதோறும் ஈரநிலப்பரப்பில் வாழும் பறவைகள் மற்றும் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு (2024) கணக்கெடுப்பு, கடந்த ஜனவரி மாதம் 27, 28ம் தேதிகளில் ஈரநிலப்பகுதிகளிலும், மார்ச் 2, 3ம் தேதிகளில் நிலப்பரப்பிலும் நடத்தப்பட்டது. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் னிவாஸ் ரெட்டி மேற்பார்வையில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்) ராகேஷ்குமார் டோக்ரா, கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) நாகநாதன், உதவி வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) ஷர்மிலி தலைமையில் மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் இக்கணக்கெடுப்பை வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்களுடன் இணைந்து மேற்கொண்டனர்.

இதில், வனக்கோட்டங்கள் வாரியாக வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி மாணவர்கள் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டு, ஈரநிலப்பறவைகள் மற்றும் நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேரில் பார்த்த பறவைகளை பதிவு செய்து கொண்டனர். நவீன கேமராக்கள் மற்றும் ெதாலைநோக்கி கொண்டும், பல்வேறு பறவை இனங்களை வனத்துறையினர் பார்த்தும், படம் பிடித்தும் பதிவு செய்தனர். மாநிலம் முழுவதும் நடந்த இக்கணக்கெடுப்பின் மதிப்பீட்டு விவரத்தை, வனத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், 179 வனப்பகுதியிலும், 555 கிராமப்புறங்களிலும், 170 நகர்ப்புறங்களிலும் என 894 இடங்களில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில், 389 பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும். இவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்கள். கணக்கெடுப்பின் போது பார்த்த 6.80 லட்சம் பறவைகளில், 79 சதவீதம் நீர்ப்பறவைகள் (5,36,245), 21 சதவீதம் நிலப்பறவைகள் (1,43,783) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் ஜனவரி, மார்ச் மாதங்களில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினோம். இதில், 3,350 வனத்துறை பணியாளர்கள், 6,450 தர்னார்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் என மொத்தம் 9,800 பேர் பங்கெடுத்தனர். அனைவரது முயற்சியால் ஒட்டுமொத்தமாக 389 பற வை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 6.80 லட்சம் பறவைகளை பார்த்துள்ளோம். இந்த மதிப்பீட்டு பட்டியல் தற்போது வனத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது,’ என்றனர்.

The post தமிழ்நாடு முழுவதும் 894 இடங்களில் வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் 389 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு: 6.80 லட்சம் பறவைகளை பார்த்தனர் appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Tamil Nadu ,Salem ,Tamil Nadu Government Forest Department ,Dinakaran ,
× RELATED வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற...