×

தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி போலீசார் விழிப்புணர்வு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர், மே 15:தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தஞ்சாவூர் மாநகரில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக தஞ்சாவூர் பெரியகோவில் அருகே உள்ள மேம்பாலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலத்தில் 30 கிமீ வேகத்தில் தான் செல்ல வேண்டும் என பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் மேம்பாலத்தில் வேகமாக தான் செல்கின்றனர். நேற்று அடுத்தடுத்து மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இந்த விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.அதேபோல் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே நடந்த விபத்தில் ஒரு சிறுவன் காயம் அடைந்தார். தஞ்சாவூர் மாநகரில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தஞ்சாவூர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், கிழக்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று மாலை தஞ்சை ராஜப்பா பூங்கா அருகே இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை நிறுத்தி சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தலைக்கவசம் மற்றும் 4 சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட்பெல்ட் அணிய வேண்டும். சாலையை கடக்கும் பொழுதும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டு மரத்தின் பயன்களையும், நமது உயிரின் பயன்களையும் மிக தெள்ளத் தெளிவாக விளக்கினர். இதையடுத்து சாலை விதிகளை மதிப்போம்.உயிர் சேதங்களை தவிர்ப்போம் என உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகரில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் புதிய அபராதத்தொகை பட்டியலையும் போலீசார் வெளியிட்டனர்.

The post தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி போலீசார் விழிப்புணர்வு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur flyover ,Thanjavur ,Thanjavur Periyakovil ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் குருதயாள் சர்மா அருகே...