×

திருவாரூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் காணாமல் போனதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவாரூர், மே 15: திருவாரூர் மாவட்டத்தில் கத்திரி வெயிலை தகர்த்தெறிந்த கோடை மழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 105 டிகிரி முதல் 115 டிகரி வரையில் கடந்த 2 மாத காலமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் 105 டிகிரி வரையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் வெயில் காலத்தின் போது வழக்கத்தை விட கூடுதலாக மனிதர்கள் உடலில் வெப்பம் அதிகரித்ததையொட்டி காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொது மக்கள் அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்,

மனிதர்களின் சராசரி உடல் வெப்ப நிலையானது 37 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் அதிக வெப்பம் காரணமாக வியர்வை மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வதன் காரணமாக உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறும் போது உப்பு சத்து மற்றும் நீர் சத்து பற்றாகுறை ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிக தாகம், தலைவலி, உடல் சேர்வு, தலைசுற்றல், மயக்கம், தசை பிடிப்பு, வலிப்பு போன்றவை ஏற்படுவதுடன் குறைந்த அளவிலான சிறுநீர் மட்டுமே வெளியேறும்.

எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவுதண்ணீர் குடிக்க வேண்டும், தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமானஅளவு தண்ணீர் அருந்த வேண்டும், பயணத்தின் போது குடி நீரை எடுத்துச் செல்லவேண்டும், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர்,புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகளை பருகி நீரிழப்பை தவிர்க்க வேண்டும், பருவக்கால பழங்கள்,காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்தஉணவுகளை உண்ண வேண்டும், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், மதிய நேரத்தில் வெளியில் செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்தும், குடை (கருப்புநிறத்தைதவிர்த்து) எடுத்து செல்ல வேண்டும், மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதுடன் தினந்தோறும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும், போதிய இடைவேளைகளில் குழந்தைகள் நீர் அருந்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி வரையில் வெப்ப அலையுடன் கூடிய 104 டிகிரி அளவில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

இந்நிலையில் வெப்ப சலணம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து கடந்த 8ம் தேதி முதல் ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் தொடர்ந்து மிதமான மழையாக பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கத்திரி வெயிலை தகர்த்தெறிந்த இந்த கோடை மழையால் வெப்பம் குறைந்துள்ளதையடுத்து பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கோடை நெல்சாகுபடி மற்றும் பருத்தி பயிர் சாகுபடிக்கு இந்த மழை உகந்ததாக இருந்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் காணாமல் போனதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kathri Veil ,Tiruvarur district ,Tiruvarur ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி தொடங்கிய...