காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக பேருந்துகள் உள்ளே வந்து செல்ல பல்வேறு சிரமங்கள் இருந்தன. இதனால் பேருந்து நிலைய விரிவாக்கம் செய்வதற்கும், புதிய வணிக வளாகம் கட்டுவதற்கும் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்ரூத் 20 திட்டத்தில் ரூ.10 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 5 இடங்களில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் – புதிய குடிநீர் இணைப்புகள் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில்
மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. முதற்கட்டமாக கள்ளிக்குடி சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக் கப்பட்டு இரண்டாவது கட்டமாக பாண்டியன் நகர் முக்கு ரோட்டிலிருந்து அரசு மேனிலைப்பள்ளி வரையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் (எ)ஆவுடையப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மழைநீர் வடிகால் தோண்டும் போது சாலை ஓரத்தில் மண் குவிக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக காலதாமதமின்றி மண் குவியலை அகற்ற வேண்டும். அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தகாரர்களை கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் செந்தில், பொறியாளர் கணேசன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
The post காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு: விரைந்து முடிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.