நெல்லை: நெல்லை காங்கிரஸ் தலைவரை 7 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பின் தொடர்ந்த 2 பேர் யார் என்று தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் தென் மண்டல ஐஜி 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. உடல் மீட்கப்பட்டு 11 நாட்கள் கடந்தும் இவ்வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இவ்வழக்கில் கிடைத்த தடயங்களான கத்தி, கருகிய டார்ச் லைட், தீப்பெட்டி உள்ளிட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராவில் சிக்கிய தடயங்கள் போலீசாரின் விசாரணைக்கு போதுமானதாக இல்லை.
இவ்வழக்கு விசாரணை குறித்து தென்மண்டல ஐஜி கண்ணன் நேற்று முன்தினம் கூறுகையில், ‘இன்னமும் ஒரு வாரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கு முடிவுக்கு வரும்’ என நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரத்தில் இவ்வழக்கில் அடுத்தகட்ட நகர்வுக்கு டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள், பிரேத பரிசோதனை முழுமையான அறிக்கை, தடயவியல் ஆய்வு முடிவுகள் ஆகியவை இப்போதைக்கு அவசியம் தேவை என்று தனிப்படை போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் கொலை வழக்கை விசாரிக்கும் தனிப்படை அதிகாரிகள் மற்றும் ேபாலீசாருடன் நெல்லைக்கு வந்த தென்மண்டல ஐஜி கண்ணன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஐஜி சார்பில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைகள் குறித்தான சில ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா என்பதை இன்னும் இரு தினங்களுக்குள் உறுதிப்படுத்திட வேண்டும், முழு விபரங்களுடன் கூடிய போஸ்ட்மார்ட்டம் அறிக்கை மற்றும் ஜெயக்குமார் கடிதங்களில் இடம் பெற்றுள்ள கையெழுத்தை உறுதி செய்வதற்கான அறிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திட வேண்டும் என்று போலீசாருக்கு ஐஜி அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் கரைச்சுத்துப்புதூரில் இருந்து ஜெயக்குமார் கடைசியாக சென்ற இடங்களில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்பது குறித்து இரு தனிப்படையினர் அந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, திசையன்விளை ஜவுளிக் கடை, இட்டமொழியிலுள்ள அரசு வங்கி, ஆணைகுடி நகைக்கடை ஆகியவற்றிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை மீண்டும் நாங்குநேரி டிஎஸ்பி யோகேஸ்குமார் தலைமையில் 3 தனிப்படையினர், சைபர் கிரைம், தடயவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.
இதில் ஒரு சிசிடிவி உட்பட வழி நெடுகவுள்ள சிசிடிவியில் பதிவான காட்சியியில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் ஒரு பைக் ஜெயக்குமார் சென்ற காரை பின் தொடர்ந்து செல்கிறது. அந்த பைக்கில் நம்பர் பிளேட் கிடையாது. அந்த காட்சிகள் மங்கலாக (துல்லியமாக தெரியவில்லை) தெரிகிறது. ஜெயக்குமாரின் காரை ஏன் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பின் தொடர்ந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பைக் திசையன்விளையிலிருந்து பின் தொடர்ந்து செல்வது தெரிய வந்துள்ளது.அவர்களின் முகம் சரிவர தெரியவில்லை, ஆனாலும் இதுதொடர்பாக தனிப்படையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெல்லை காங். தலைவரை 7 கி.மீ தூரம் பைக்கில் பின் தொடர்ந்த 2 பேர் யார்?: போலீஸ் உயரதிகாரிகளுடன் ஐஜி 3 மணி நேரம் ஆலோசனை appeared first on Dinakaran.