புதுடெல்லி: பிரதமர் மோடி பிரசாரத்தில் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் நடத்தை விதிகளை மீறுவதால் அவரை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்தது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் ஜோலே என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘உபி பிலிபிட்டில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியுள்ளார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்து, தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த 29ம் தேதி தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் எஸ்.சி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், ‘‘ சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உங்கள் புகாரை தெரிவித்தீர்களா? முதலில் அதிகாரிகளை அணுகுங்கள்’’ என அறிவுறுத்தினர். மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
The post வெறுப்பு பேச்சு, நடத்தை விதி மீறல் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி மனு appeared first on Dinakaran.