×

கண்ணியமான பிரசாரத்திற்கு கட்சி உயர்மட்ட தலைவர்கள் முன்னுதாரணமாக இருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘நாங்கள் எதிர்பார்க்கும் பிரசார பேச்சுக்களுக்கு நல்ல முன்னுதாரணமாக கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் இருக்க வேண்டும்’ என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2 மாதமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பான புகார்களில் 90 சதவீத புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. பாஜ, காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் மீதான பெரிய புகார்கள் எதுவும் நிலுவையில் இல்லை. பெரிய அளவிலான புகார்களை பொறுத்த வரை காங்கிரசிடம் இருந்து 170, பாஜவிடமிருந்து 95, மற்ற கட்சிகளிடம் இருந்து 160 புகார்கள் வந்துள்ளன. மொத்தம் 425 புகார்களில் 400 புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டன.

இதுதவிர, மதம், சாதி, மொழி ரீதியாக பிளவுபடுத்தும் வகையிலான நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரம் தொடர்பான காங்கிரஸ் மற்றும் பாஜவின் சில புகார்கள் நிலுவையில் உள்ளன. இனி எஞ்சிய தேர்தலில் ஆவது நாட்டின் சமூக கட்டமைப்பில் நிரந்தர பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்சியினரின் பிரசார பேச்சுக்களை சரி செய்வது உயர்மட்ட தலைவர்களின் பொறுப்பு. அவர்கள் பிரசாரத்திற்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மோடி, ராகுல் மீது விரைவில் நடவடிக்கை
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் தரப்பட்ட புகாருக்கு பாஜ தேசிய தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையானது. இது குறித்து தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில், ‘இதுபோன்ற விதிமீறல்களில் இருந்து தங்கள் நட்சத்திர பேச்சாளர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு கட்சிகளுக்குதான் உண்டு. எனவே கட்சி தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. பிரதமர் மோடி, ராகுல் பேச்சுக்கு எதிரான நோட்டீஸ் தொடர்பாக பாஜ, காங்கிரஸ் இரு கட்சிகளும் பதில் அளித்துள்ளன. விரைவில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

The post கண்ணியமான பிரசாரத்திற்கு கட்சி உயர்மட்ட தலைவர்கள் முன்னுதாரணமாக இருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,
× RELATED வாக்குப்பதிவு விவரங்களை 2 நாளில்...