×

தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்த அவதூறு வழக்கு; பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் நேரில் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு: ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மத்திய சென்னை எம்.பி தொகுதி நிதியை முழுவதும் பயன்படுத்தவில்லை என்று பாஜ வேட்பாளர் வினோஜ் பி செல்வம் கூறியதை எதிர்த்து அவர் மீது தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், வினோஜ் பி செல்வம் ஆஜராகததால் விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளி வைத்த எழும்பூர் நீதிமன்றம் அன்று அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் எதுவும் பயன்படுத்தவில்லை என்று கடந்த ஏப்ரல் 13ம் தேதி மத்திய சென்னை தொகுதி பாஜ வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை எதிர்த்து அவர் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு மனுவை தக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், உண்மைக்கு புறம்பாக அரசியல் உள்நோக்கத்துடன் எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல் அவதூறு பரப்பும் வகையில் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதிக்கான நிதி 95 சதவீத்திற்கு மேல் தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வினோஜ் பி செல்வம் பொய்யான தகவல்களை பதிவிட்டுள்ளார். இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500ன் கீழ் கிரிமினல் குற்றமாகும். எனவே வினோஜ் பி செல்வம் மீது கிரிமினல் அவதூறு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது, வினோஜ் பி செல்வம் தரப்பில் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் ஆஜராகி வினோஜ் பி செல்வம் வரமுடியாத நிலையில் இருப்பதால் அவர் விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதற்கு தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் விமல் மோகன் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன், அன்றைய தினம் வினோஜ் பி செல்வம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்த அவதூறு வழக்கு; பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் நேரில் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு: ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maran ,BJP ,Vinoj P Selvam ,Egmore ,Chennai ,Dayanithi Maran ,Madhya ,Vinoj B Selvam ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்த...