×

ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்திய பிறகும் கூடுதல் பணம் கேட்டு டார்ச்சர் ஆபாச படங்களை உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டியதால் கம்பெனி ஊழியர் தற்கொலை: Â மாங்காடு அருகே சோகம் Â 5 நாளில் 2வது சம்பவம்

குன்றத்தூர், மே 15: மாங்காடு அருகே ஆன்லைன் ஆப் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய நிலையில், கூடுதல் பணம் கேட்டு மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ததுடன், ஆபாச படங்களை உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டியதால் மனமுடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மாங்காடு அடுத்த முகலிவாக்கம், கணேஷ் அவென்யூ, சுப நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (31). அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த பூஜாகுமாரி (29) என்ற பெண்ணுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. பூஜாகுமாரி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், சீனிவாசன் குடும்ப சூழல் காரணமாக, ஆன்லைன் கடன் செயலி மூலம் ₹2 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகை முழுவதையும், தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனாலும், கூடுதல் பணம் கேட்டு, கடன் செயலி ஊழியர்கள் தொடர்ந்து சீனிவாசனை தொல்லை செய்து வந்துள்ளனர். ஆனால், இவர் பணம் செலுத்த மறுத்ததால், அடிக்கடி வீட்டிற்கு ஆள் அனுப்பி பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். பின்னர், இவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் நம்பர்களுக்கு அனுப்பி உள்ளனர். மேலும், செல்போனில் தொடர்புகொண்டு சீனிவாசனை ஆபாசமாக பேசி வந்துள்ளனர். இதனால் சீனிவாசனுக்கும், அவரது மனைவி பூஜாகுமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், பூஜாகுமாரி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் செய்வதறியாது தவித்த சீனிவாசன், கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்தி விட்டு, தன் அறைக்குள் சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை தனது வீட்டிற்கு பூஜாகுமாரி வந்து பார்த்த போது, வீட்டின் வெளிப்பக்க கதவுகள் அனைத்தும் உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்து, கணவர் பெயரை சொல்லி அழைத்துப் பார்த்தும் சத்தம் வராததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு, படுக்கையறையில் சீனிவாசன் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. இதை பார்த்து அவர் கதறி துடித்தார். தகவலறிந்த மாங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சீனிவாசனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சீனிவாசன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததும், அதன் காரணமாக ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றதும், அந்த பணத்தை திருப்பி செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு கடன் செயலி ஊழியர்கள் மிரட்டல் விடுத்ததால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

அவரது செல்போனை பறிமுதல் செய்து, மிரட்டல் விடுத்த நபர்களின் விவரங்களை ேபாலீசார் சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோபோல், சென்னை புதுப்பேட்டை நாகப்பன் தெருவை சேர்ந்த பாஜ பிரமுகர் கோபிநாத் (33), கடந்த 2 மாதங்களுக்கு முன், ஆன்லைன் கடன் செயலியில் ₹50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதில் ₹30 ஆயிரத்தை திருப்பி செலுத்திய நிலையில், மீதமுள்ள பணத்தை கோபிநாத் சரிவர திருப்பி செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இதனால், அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவரது உறவினர்களுக்கு அனுப்பி, மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த கோபிநாத், கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடந்த 5 நாட்களில் தற்போது மற்றொரு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்திய பிறகும் கூடுதல் பணம் கேட்டு டார்ச்சர் ஆபாச படங்களை உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டியதால் கம்பெனி ஊழியர் தற்கொலை: Â மாங்காடு அருகே சோகம் Â 5 நாளில் 2வது சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Mangadu ,Kunradthur ,
× RELATED பூந்தமல்லியில் இந்து அமைப்பு மாநில...