- கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்
- குடியாதம்
- Gudiyattam
- வைகாசி
- கெங்கையம்மன் கோவில்
- மஹாநதி
- குடியாத்தம்
- வேலூர் மாவட்டம்
- தரிசனம் குடியாத்தம்
- Kolagalam
குடியாத்தம், மே 15: குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம் தேதி சிரசு திருவிழா நடைபெறும். இந்தாண்டு சிரசு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 29ம் தேதி பால்கம்பம் நடப்பட்டு, பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்த நிலையில், கடந்த 10ம் தேதி கொடியேற்றமும், அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலும் மிளகு, உப்பு, மலர், நாணயங்கள் ஆகியவற்றை தேர் மீது தூவி அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி காலை 4 மணிக்கு தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோயிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு பக்தர்களின் வெள்ளத்தில் புறப்பட்டது. பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் பாரம்பரிய கலைஞர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலத்தில் வந்தனர். குடியாத்தம் நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலை அம்மன் சிரசு வந்தடைந்தது. சிரசு ஊர்வலத்தின்போது வழிநெடுகிலும் கெங்கையம்மனுக்கு பூமாலை வழங்கியும், கற்பூரம் ஏற்றியும், தேங்காய்களை உடைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். சுற்றுச்சுவர், கட்டிடங்களின் மாடிகள், மரங்கள் மீது ஏறி நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர் கெங்கையம்மன் கோயில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் சிரசு பொருத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், கண் திறப்பு நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது. கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை போன்ற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்ததால், குடியாத்தம் நகரம் முழுவதும் திருவிழாக்கோலமாக காட்சியளித்தது. சிரசு ஊர்வலத்தையொட்டி வேலூர் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் சிரசு சண்டாளச்சி உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு, கவுண்டன்ய மகாநதி, ராஜேந்திரசிங் தெரு வழியாக சுண்ணாம்புப்பேட்டையில் உள்ள புங்கனூர் அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவின் நிறைவாக இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை இரவு பூப்பல்லக்கு வீதியுலாவும், 21ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
The post பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் லட்சக்கணக்கானோர் திரண்டு தரிசனம் குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற விழா கோலாகலம் appeared first on Dinakaran.