×
Saravana Stores

பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில் எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பா.ஜ கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா அவரது சமூக வலைத்தளமான டிவிட்டரில் கடந்த 2018ம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக ஈரோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜ் தாக்கல் செய்த 2 மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து எச்.ராஜா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘‘இந்த விவகாரம் என்பது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டது. பெண்கள் குறித்து அவரது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டது என்பது அவருக்கே தெரியாமல் மாற்று நபரால் செய்யப்பட்டுள்ளது. அவர் தான் செய்தார் என்பதற்கும் எந்தவித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ” கவரும் வகையில் வாதங்களை முன்வைப்பதால் உண்மை என்பது பொய்யாகி விடாது. மூத்த அரசியல்வாதி என்று சொல்லுகிறீர்கள், ஒரு அரசியல்வாதி பொதுதளத்தில் பேசும்போது இப்படி தான் நடக்க வேண்டுமா?. தான் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டாமா. மேலும் உங்களுக்கே தெரியாமல் அது நடந்து விட்டது என்று நீங்கள் கூறுவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

எனவே இந்த விவகாரத்தில் உங்களது தரப்பு வாதங்களை எங்களால் ஏற்க முடியாது என்பதால், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். மேலும் வழக்கையும் ரத்து செய்ய முடியாது.
கண்டிப்பாக இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை எச்.ராஜா எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக எச்.ராஜா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, வழக்கை முடித்து வைத்தனர்.

The post பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : H.Raja ,Supreme Court ,New Delhi ,H. Raja ,BJP ,Dinakaran ,
× RELATED மதுஆலை உற்பத்தி கொள்கை மாநில...